இந்தியாவின் 29வது மாநிலமாக 2014 ஜூன் 2ம் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரித்து தனி தெலங்கானா மாநிலமாக அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து இந்த மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மற்றும் தனிதெலங்கானா போராட்டத்திற்காக ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் தங்கள் இலக்கை அடைய போராடும் குணத்தை கொண்டவர்கள் ஆவர். எனவே ஆந்திராவைப் பிரித்து தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கிய அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாக இருந்தாலும், 2001ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி தனி தெலுங்கானா மாநிலத்திற்காக தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியை தொடங்கி (தற்போதைய பாரத ராஷ்டிரிய சமீதி) , போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து சந்திரசேகரராவ் தொடர்ந்து போராடி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தை நடத்தினர். இதற்கு 2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி என்ற பரிசைதான் மக்கள் தந்தனர். தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சி செய்வார் என எதிர்பார்த்தபோது, 6 மாதங்களுக்கு முன்னதாகவே சட்டப்பேரவையை சந்திரசேகர் ராவ் கலைத்தார்.
அதன்பிறகு நடந்த தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி 119 தொகுதியில் 88 தொகுதியில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என பி.ஆர்.எஸ் கட்சி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து சந்திரசேகர ராவ் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதில் சந்திரசேகர் ராவ் கஜ்வெல், காமாரெட்டி ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார். ஒருங்கிணைந்த ஆந்திராவில் ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் அதிக அளவில் இருந்த நிலையில் தனி தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் அதிக அளவில் உள்ளனர். இங்கு பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) 48 சதவீதமும், ரெட்டி சமூகம் 7 சதவீதமும் உள்ளனர். இதில் பெரும்பான்மையை சேர்ந்தவர்கள் பி.ஆர்.எஸ். – காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். இருப்பினும் இங்கு போராட்ட குணம் கொண்டு சாதி அடிப்படையில் அரசியல் இருக்காது.
தெலங்கானாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. இருப்பினும், தெலங்கானாவை பொறுத்தவரை வேலமா மற்றும் ரெட்டி சமூகம்தான் முக்கிய சாதிகளாக பார்க்கப்படுகிறது. ஐதராபாத்தை தவிர மற்ற மாவட்டங்களில் இந்த இரண்டு சாதிகளும்தான் கோலோச்சுகின்றன. தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் முஸ்லிம்கள்தான் அதிகமாக உள்ளனர். இதேபோல், ஐதராபாத்தில் உள்ள முஸ்லிம்களும், மற்ற மாவட்டங்களில் வேலமா மற்றும் ரெட்டி சமூகங்கள்தான் செல்வ செழிப்பாக உள்ளனர். ரெட்டி வம்சம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக கடலோர மற்றும் மத்திய ஆந்திராவை ஆட்சி செய்தது. இன்று தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய தெலுங்கு மாநிலங்களில் அரசியல் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் குழுவாகத் தொடர்கின்றனர். இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ரெட்டிகளுக்கு தங்கள் தொகுதிகளில் பெரும்பகுதியை வழங்குகின்றன. பிசிக்கள், எஸ்சிக்கள், எஸ்டிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் இணைந்து தெலுங்கானாவின் மக்கள் தொகையில் 90 சதவீதமாக உள்ளனர்.
ரெட்டி, வேலமா, முஸ்லிம்கள் உள்ளிட்ட வாக்குகளை பெற பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜ முட்டி மோதுகின்றன. இதற்காக சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். பி.ஆர்.எஸ் கட்சி ஓசி பிரிவினருக்கு 58 இடங்களிலும், ரெட்டி பிரிவினருக்கு 40 இடங்களிலும், பிசி பிரிவினருக்கு 22 இடங்களில், எஸ்சி பிரிவினருக்கு 20, எஸ்டி பிரிவினருக்கு 12, பெண்களுக்கு 7, முஸ்லிம்களுக்கு 3 இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள 55 வேட்பாளர்களில் ரெட்டி பிரிவினருக்கு 17, வேலமா பிரிவினருக்கு 7, பிற்படுத்தப்பட்டோருக்கு 12, எஸ்.சி. 12, எஸ்.டி. 2, பிராமண பிரிவினருக்கு 2, முஸ்லிம் 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த வேட்பாளர் வந்த பிறகு மீதமுள்ளவர்களுக்கு எவ்வாறு ஒதுக்கப்படும் என்று தெரியவரும். இந்நிலையில் பாஜக சார்பில் வெளியிடப்பட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் 20, எஸ்.சி. 8, எஸ்.டி.- 6, பெண்கள் 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது எம்.பிக்களாக உள்ள பண்டி சஞ்சய் கரீம் நகரில், கொரட்லாவில் இருந்து தருமபுரி அரவிந், போத் தொகுதியில் இருந்து சோயம் பாபுராவ் ஆகியோரும் போட்டியிட உள்ளனர். பாஜகவில் முதல் எம்.எல்.ஏவும் தொடர்ந்து வெற்றி பெறக்கூடிய கோஷாமால் தொகுதியில் மீண்டும் ராஜா சிங், ரகுநந்தன் ராவ், ஈட்டல ராஜேந்திராவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஈட்டல ராஜேந்திரா முதல்வர் சந்திரசேகர் ராவ் போட்டியிடும் கஜ்வெல் தொகுதியுடன் தற்போது எம்.எல்.ஏவாக உள்ள ஹுசூராபாத் ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார். ஒன்றிய அமைச்சரும் பாஜக மாநில தலைவருமான கிஷன் ரெட்டி தொடர்ந்து ஹார்டிக் வெற்றி பெற்று வந்த அம்பர்பேட் தொகுதியில் அறிவிக்கப்படாத நிலையில் அவரது இடமும் முஷீராபாத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டவரும் தற்போதை உத்தரபிரதேஷ் தொகுதியின் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள லட்சுமணனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லாமல் தேர்தல் பணியில் இவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்திரசேகரராவ் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் முதல்வர் கே.சி.ஆர் மகள், கவிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முன் நிறுத்தி காங்கிரஸ் மற்றும் பாஜ வாக்கு கேட்கிறது. காங்கிரஸ் சமீபத்தில் மற்ற மாநில தேர்தல் முடிவுகள் மற்றும் ராகுலின் நடைபயணம் பலத்தால் தெலங்கானாவில் அவர்களின் மதிப்பு உயர்ந்து வருகிறது. தெலங்கானா தெலுங்கு தேசம் கட்சிக்கும் குறிப்பிடத்தக்க வாக்குகள் உள்ளன. ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா, ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை ஆரம்பித்து 119 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இந்த பலமுனை போட்டியில் வெல்ல போவது யார் என்று டிசம்பர் 3ம் தேதி தெரிந்துவிடும்.