Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

‘ரெட் அலர்ட்’ பாதுகாப்பு நடவடிக்கை சென்னையில் 130 இடங்களில் அதிரடி வாகன சோதனை: 2 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் நடைபெற்றது

சென்னை: ரெட் அலர்ட் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 130 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் உட்பட பலர் சிக்கினர். சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகர காவல் எல்லையில் ‘ரெட் அலர்ட்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது.

போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரவேஷ்குமார் தலைமையில் 4 இணை கமிஷனர்கள் மேற்பார்வையில் 12 காவல் மாவட்ட துணை கமிஷனர்கள் நேரடி பார்வையில் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னை முழுவதும் காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வடபழனி 100 அடி சாலை, ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மத்தியகைலாஷ், காந்தி மண்டபம், கிண்டி, அண்ணாநகர், கொளத்தூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பூக்கடை, யானைக்கவுனி, கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு என நேற்று 130 இடங்களில் வாகன சோதனை நடந்தது.

மேலும், சென்னை முழுவதும் உள்ள 350க்கும் மேற்பட்ட லாட்ஜிகள், தங்கும் விடுதிகள் மற்றும் கோயில்கள், சுற்றுலா தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்தந்த மாவட்ட துணை கமிஷனர்கள் நேரடியாக சோதனையில் ஈடுபடும் பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். வாகன சோதனையில் கார்கள், பைக்குகள், சரக்கு வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். லாட்ஜிகளில் நடந்த சோதனையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கிய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதேநேரம் குற்ற பின்னணியில் உள்ள ஏ பிளஸ் மற்றும் ஏ கேட்டகரி ரவுடிகளையும் போலீசார் கண்காணித்தனர். இந்த அதிரடி சோதனையால் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் மற்றும் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் பலர் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை இனி ஒவ்வொரு வார இறுதி நாட்களில் நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.