Tuesday, June 17, 2025
Home செய்திகள்Showinpage ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் வெளுத்து வாங்கியது நீலகிரியில் 38 செ.மீ கொட்டி தீர்த்த மழை: 25 இடங்களில் மரங்கள் விழுந்தன: கேரளா சிறுவன் பரிதாப பலி

ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் வெளுத்து வாங்கியது நீலகிரியில் 38 செ.மீ கொட்டி தீர்த்த மழை: 25 இடங்களில் மரங்கள் விழுந்தன: கேரளா சிறுவன் பரிதாப பலி

by Arun Kumar

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் காரணமாக வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. நீலகிரி பார்சன்ஸ் வேலியில் 38 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழையில் 25 இடங்களில் மரங்கள் விழுந்தன. ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரளா சிறுவன் மீது மரம் விழுந்து பலியானார். கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

இதனால் மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21.5 செ.மீயும், எமரால்டு, பந்தலூரில் 9 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி பார்சன்ஸ்வேலியில் 38 செ.மீ. மழை கொட்டித்தீர்த்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போது கோடை சீசன் என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

மழை கொட்டித்தீர்ப்பதால் இப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும்போது, மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி நேற்று வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா சிகரம், அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், குன்னூர் லேம்ஸ்ராக், பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. ஊட்டி படகு இல்லமும் மூடப்பட்டது. ஊட்டியில் கனமழை ெதாடரும் நிலையில் இந்த சுற்றுலா தலங்கள் 2வது நாளாக இன்றும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் பலத்த காற்றுடன் மழை நீடிக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் கூடலூர் ஊசிமலை ஆகிய சுற்றுலா தலங்கள் நேற்று மாலை 4 மணியுடன் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இன்றும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கன மழை காரணமாக நேற்று முன்தினம் மதியம் ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் காந்திநகர் அருகே சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி-கூடலூர் சாலையில் பைக்காரா அருகே நேற்று முன்தினம் இரவு 11.40 மணி அளவில் ராட்சத கற்பூர மரம் விழுந்தது. இதனால் வாகனங்கள் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் நின்றன. ஊட்டி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

நேற்று காலை மஞ்சூர் சாலை லவ்டேல் பகுதி, ஊட்டி அருகே நஞ்சநாடு சாலை, குன்னூர் அருகே, ஊட்டி படகு இல்ல பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாட்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மழை காரணமாக ராட்சத மரங்கள் விழுந்தன. அவற்றை உடனுக்குடன் தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். ஊட்டியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கடும் குளிர் நிலவியது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகள் அணிந்தபடி நடமாடினர்.

மரம் முறிந்து கேரள சிறுவன் பலி: கேரளாவின் கள்ளிக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரசித் என்பவர் குடும்பத்தினருடன் நேற்று காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மழை காரணமாக மூடப்பட்ட நிலையில் ஊட்டி-கூடலூர் சாலையில் 8வது மைல் பகுதியில் உள்ள டீரி பார்க்கிற்கு சென்றார். அந்த சமயத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதில் ராட்சத மரம் வேருடன் சாய்ந்து பிரசித்தின் மகன் ஆதிதேவ் (15) மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அரசு கொறாடா ராமசந்திரன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கோவையிலும் வெளுத்து வாங்கியது: கோவை மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் தொடர் மழை பெய்தது. கவுண்டம்பாளையம், வடகோவை, பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர், டவுன்ஹால், உக்கடம், வடவள்ளி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை கொட்டியது. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

நேற்றும் அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலர் வீடுகளிலேயே முடங்கினர். மாநகரில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தொடர் மழையால் கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீராதாரமான, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்துள்ள கவியருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வால்பாறை பகுதியில் கனமழை கொட்டுவதால் அங்குள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.

குமரியிலும் மழை: குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாளாக கனமழை கொட்டியது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்திருந்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து சேதங்கள் ஏற்பட்டன. இதனால் மின்கம்பங்கள் உடைந்து விழுந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் 20 வீடுகள் பகுதி அளவு இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. பேரலைக்கு வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறி குமரி மாவட்ட கடல் பகுதிக்கு தொடர்ந்து ‘ஆரஞ்ச் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நெல்லை, தென்காசி மாவட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. குற்றாலத்தில் கடந்த 2 நாட்களாக பகல் வேளைகளில் சாரல் மழை பொழிகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மெயினருவியில் நேற்று காலை 11 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

11 மணிக்கு பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆரஞ்சு எச்சரிக்கை எதிரொலியாலும் மழைப்பகுதியில் பெய்த தொடர் மழையாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இரவு 7 மணி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து தடுப்பணையை தாண்டி கொட்டுகிறது. இதனால் தடுப்பணை மற்றும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

* நீர் வீழ்ச்சியில் கார் கவிழ்ந்து விபத்து

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள இத்தலார் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (52). இவர் தனது மனைவி ராதா லட்சுமி (49) மற்றும் உறவினரான விஜயா (43), தர்ஷன் ஆகியோருடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ தேவையை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். காட்டேரி பூங்கா அருகேயுள்ள லாஸ் நீர்வீழ்ச்சி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி பள்ளத்தில் பாய்ந்து விழுந்தது. இதில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

* ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் மழையால் மரம் முறிந்து 10 கிராமங்கள் துண்டிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது வீசிய பலத்த காற்றுக்கு, ஏற்காட்டில் உள்ள சேர்வராயன் மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில், அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகே ராட்சத மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. நள்ளிரவு என்பதால் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.

அதேசமயம் சேர்வராயன் மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 2 மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மலை கிராமங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

* ஆற்று வெள்ளத்தில் 3 பேருடன் சிக்கிய கார்

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ராஜேஷ். வேட்டை தடுப்பு காவலர். இவரது நண்பர்களான கேரள மாநிலம் இடுக்கி, மஞ்சேரியை சேர்ந்த அருண் தாமஸ், ஆண்ட்ரூ தாமஸ் ஆகியோர் புதிதாக கார் வாங்கினர். அந்த காரில் கூடலூர் வந்து நண்பர் ராஜேஷை அழைத்துக்கொண்டு ஓவேலி பகுதிக்கு சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து தர்மகிரி பகுதிக்கு பெரிசோலை வழியாக சென்றனர். இந்த பகுதி வழியாக பாண்டியாற்றின் கிளை ஆறு ஓடுகிறது.

அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 3 பேரும் காருடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தனர். செல்போன் மூலம் அளித்த தகவலின்படி கூடலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வந்தனர். அதற்குள் வெள்ளம் அதிரித்ததால் 3 பேரும் கண்ணாடி வழியாக வெளியே வந்து காரின் மேல் ஏறி நின்றனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கயிற்றுடன் நீச்சல் அடித்து காரின் அருகே சென்றனர். இதையடுத்து கயிறு கட்டி சுமார் ஒரு மணி நேரம் போராடி காருடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டனர். மரத்தில் கயிறு கட்டி கார் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi