சென்னை: சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு தமிழ்நாடு போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியது. பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்பவ செந்தில் சீசிங் ராஜா உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் சம்பவ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கிருஷ்ணகுமார் (எ) மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர் பண உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அடையாறில் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் சம்பவம் செந்தில் தங்கியிருந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டல் பொது மேலாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை அடையாறு பகுதியில் விடுதி, சர்வீஸ் அபார்ட்மெண்ட் பணியாளர்களிடம் சம்பவம் செந்தில் போட்டோவை காட்டி விசாரணை நடத்தி உள்ளனர்.
அடையாறு பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்கும் மொட்டை கிருஷ்ணன் சென்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு தமிழ்நாடு போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியது. ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மொட்டை கிருஷ்ணன் பிடிபட்டால், ஆம்ஸ்ட்ராங் கொலை, சம்போ செந்தில் இருப்பிடம் பற்றி தகவல் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.