பல சிறப்புகள் மிகுந்த நமது பாரம்பரிய நெல் ரகங்களை சில தன்னார்வலர்களும், விவசாயப் பெருமக்களும் தேடித்தேடி மீட்டெடுத்து பயிரிட்டு பரவலாக்கம் செய்து வருகிறார்கள். இந்த வகையில் வால் சிவப்பு என்ற பாரம்பரிய ரக நெல்லையும் விவசாயிகள் பரவலாக பயிரிட்டு வருகிறார்கள்.
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பாலம் மற்றும் கீவலூர் பகுதிகளில் நன்கு வளரக்கூடிய நெல் ரகங்களில் வால் சிவப்பும் ஒன்று. 145 – 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் ரகம் சுமார் 160 செ.மீ உயரம் வரையில் வளரக்கூடியது. சிவப்பு நிறத்தில் உள்ள இதன் நெல்மணிகளின் பின்புறத்தில் சிறு பறவை ஒன்றின் வால் போன்று இருக்கும் என்பதால் இதற்கு வால் சிவப்பு என்ற பெயர் வந்திருக்கிறது.
மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களுக்கு ஏற்ற ரகமான வால் சிவப்பு பின் சம்பா பட்டத்துக்கு ஏற்றதாகும். தமிழகத்தின் திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இந்தப் பட்டத்தில் பயிரிடப்படுகிறது. சாதாரண, பாரம்பரியமான நடவு முறையில் பயிரிட ஏக்கருக்கு 25 கிலோவரை விதைநெல் தேவைப்படும். நவீன முறை நடவு என்றால் 10 கிலோ விதை நெல்லும், ஒற்றைநாற்று முறை என்றால் ஐந்து கிலோ விதை நெல்லும் தேவைப்படும்.
ஒரு ஏக்கர் நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கு ஐந்து சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 40-50 கிலோ வரை தொழுவுரத்தைப் போட்டு இரண்டு சால் சேற்று உழவில் நிலத்தைச் சமப்படுத்திக்கொள்ள வேண்டும்.
100 லிட்டர் தண்ணீருக்கு ஐந்து லிட்டர் வரை அமுதக்கரைசல் கலந்து அதில் விதை நெல்லை சணல் சாக்கில் போட்டுக் கட்ட வேண்டும். அரை நாளுக்குப் பின் தண்ணீரை வடித்து மீண்டும் அரை நாள் இருட்டறையில் வைத்திருக்க வேண்டும். பிறகு நான்கு அங்குல உயரத்துக்கு நாற்றங்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்சி விதைக்க வேண்டும்.
அடுத்த அரை நாளில் நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடித்துவிட வேண்டும். இப்படி நான்கைந்து நாட்கள் செய்தால் விதைநெல் முளைப்பெடுக்கும். 10-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வடிகட்டிய மாட்டுச் சிறுநீரைக் கலந்து தெளித்தால், பூச்சி-நோய் தாக்குதல் இருக்காது. நாற்றும் நன்றாக வளரும். ஒரு மாதத்துக்குள் நடவுக்குத் தயாராகிவிடும். நாற்றுத் தயாராகும் சமயத்திலேயே நடவு வயலையும், தயார் செய்வது நல்லது. இரண்டு சால் சேற்று உழவு செய்து சமப்படுத்தி, ஏக்கருக்கு 200 கிலோ தொழுவுரமிட்டு சாதாரண முறையில் அரையடி இடைவெளியில் குத்துக்கு இரண்டு மூன்று நாற்றுக்களாக நடவு செய்வது நல்லது. நடவு முடிந்த 20-ம் நாளில் தொழுவுரமிட வேண்டும். 25-ம் நாளில் களை எடுக்க வேண்டும்.
பஞ்சகவ்யா, அமிர்தக் கரைசல், மீன் அமிலம் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்படாது. அவசியம் எனில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மூலிகை அட்டை வைக்கலாம். வேப்ப இலை, ஊமத்தை, நொச்சி, எருக்கு மற்றும் சோற்றுக்கற்றாழை ஆகியவற்றை சம அளவில் எடுத்து சிறிது கோமியம் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு மடங்கு கோமியத்தைக் கலக்க வேண்டும். அதாவது இலைகளை, தலா ஒரு கிலோ என்ற விகிதத்தில் எடுத்திருந்தால் 5 கிலோ கிடைக்கும்.
இவ்வாறு பராமரிப்பு செய்துவர 95வது நாளில் கதிர் பிடிக்கத் தொடங்கும்போது 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மோர்க்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து ஏக்கருக்கு 10 டேங்க் தெளித்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படும். 115-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத்துவங்கும். 130வது நாள் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி, 140-150வது நாளில் அறுவடை செய்யலாம். வால் சிவப்பு நெல் ஒரு ஏக்கருக்கு சுமார் 900 கிலோ வரை விளைச்சல் தரக்கூடியது. இதை அரிசியாக மாற்றினால் 550 கிலோ அரிசி கிடைக்கும்.
*வால் சிவப்பு அரிசியை ஊடுபயிராகப் பயிரிடுவது என்றால் விதைநேர்த்தி மட்டும் செய்தாலே போதுமானது. எந்தவிதமான பராமரிப்பு இன்றியும் இது சிறப்பாக வளரும்.
*சிவப்பு அரிசியின் பயன்கள் அனைத்தும் நிறைந்த வால் சிவப்பு அரிசியில் உணவு சமைத்து சாப்பிடும்போது, மிக எளிதாக சீரணம் ஆகிவிடும். வளரும் குழந்தைகள் உடல் பலவீனமானவர்களுக்கு இது மிகவும் உகந்தது.
*உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம். இத்துடன் உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் உடல் எடை குறையும்.
*மற்ற அரிசியில் இல்லாத அளவுக்கு சிவப்பு அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, பி3, பி6, இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்த நாகம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.