நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வீரக்கல் கிராமத்தில் வெள்ளைமாலை வீருமாறம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாத வெள்ளிக்கிழமைகளில் இரவு முழுவதும் திருவிழா நடைபெறும். இதன்படி வைகாசி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் இரவு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கென தனித்தனியே தற்காலிக அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பெண்கள் குளிக்கும்போது வீரக்கல் அருகே வண்ணம்பட்டியை சேர்ந்த 4 இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். உடனே பொதுமக்கள் 4 பேரையும் மடக்கி பிடித்து அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நேற்று அதிகாலை 4 மணியளவில் திண்டுக்கல்- குமுளி, மதுரை- பழநி சாலை செம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் 500க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில இளைஞர்கள் சாலையில் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதான சாலை சந்திப்பில் போராட்டம் நடந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்து கடும் நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டிஎஸ்பி வீடியோ எடுத்த இளைஞர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சுமார் 4 மணிநேரத்திற்கு பின் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து விழா கமிட்டி தலைவர் ராமராஜ் அளித்த புகாரின்பேரில், செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ விஜயபாண்டி தலைமையிலான தனிப்படையினர் தப்பியவர்களை தேடி வந்தனர். அப்போது செம்பட்டி அருகே காட்டு பகுதியில் பதுங்கி இருந்து கல்லூரி மாணவர் நவீன் (20) மற்றும் பள்ளி மாணவர் 17 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் இருவரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நவீனை சிறையிலும், சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் அதே ஊரை சேர்ந்த ஹரி, விஷ்ணு ஆகியோரை தேடி வருகின்றனர்.