Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவல் நிலையம் எதிரே வாலிபர் சடலம் மீட்பு: உறவினர்கள் மறியல்

நெய்வேலி: நெய்வேலியில் காவல் நிலையம் முன் வாலிபர் சடலம் கிடந்தது. இதையொட்டி போலீசாரை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (36). மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு என்எல்சி ஆர்ச் கேட் அருகில் தில்லைநகர் பகுதியில் பைக்கில் வந்தார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நெய்வேலி நகர போலீசார் ராஜ்குமார் பைக்கை நிறுத்தி ஆவணங்களை கேட்டனர். ராஜ்குமார் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாததால் ைபக்கை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். ஆவணங்களை சமர்பித்து பைக்கை பெற்றுக் கொள்ளுமாறு கூறி ராஜ்குமாரை அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் கும்பகோணம்-விக்கிரவாண்டி நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றார்.

இதற்கிடையே காவல் நிலையம் எதிரில் உள்ள பழக்கடை முன்பு நள்ளிரவு 1 மணி அளவில் ராஜ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8 மணி அளவில் நெய்வேலி நகர காவல்நிலையம் எதிரே திரண்டனர். ராஜ்குமார் உயிரிழப்புக்கு போலீசார்தான் காரணம் எனக்கூறி, சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து கடலூர் எஸ்பி ராஜாராம் மற்றும் போலீசார் வந்து அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.