புதுச்சேரி: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பாஜ எம்எல்ஏக்கள் அபகரித்த ரூ.50 கோடி கோயில் நிலத்தை அதிகாரிகள் மீட்டு தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தனர். புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரயின்போ நகரில் உள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள (64 ஆயிரம் சதுரஅடி) நிலம் போலி பத்திரம் தயாரித்து அபகரிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறை வழக்குபதிந்து விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், போலி உயிலுக்கு பட்டா மாற்றம் செய்த தாசில்தார் பாலாஜி உள்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலத்தை பாஜக எம்எல்ஏக்களான ஜான்குமார் மற்றும் அவரது மகன் விவிலியன் ரிச்சர்ட் குடும்பத்தினர் அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வேல்முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கமாட்சியம்மன் கோயில் நிலத்தை உடனடியாக தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க புதுவை அரசுக்கு உத்தரவிட்டார். இதற்கான நடவடிக்கையை புதுச்சேரி சப்-கலெக்டர் கந்தசாமி (வருவாய்) ஒப்புதலோடு வருவாய் அதிகாரி அருண் அய்யாவு மேற்கொண்டார்.
அதன்பேரில் காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 2 சொத்துக்களும் நேற்று காலை மீட்கப்பட்ட இடத்தை கோயில் அறங்காவல் குழுவினருக்கு காண்பித்து ஒப்படைக்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன் முன்னிலையில் காமாட்சியம்மன் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளிடம், சாரம் வருவாய் கிராமத்துக்குட்பட்ட காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்த நிலத்துக்கான ஆவணங்கள் சப்-கலெக்டர் கந்தசாமி தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.
பெரியகடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிகழ்வின்போது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு எஸ்பி மோகன்குமார் தலைமையிலான குழுவினரும் உடனிருந்தனர். அப்போது அங்கிருந்த காமாட்சியம்மன் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நிலத்தை மீட்க உதவிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொண்டனர்.