காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் களவுபோன சுமார் ரூ.1.46 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி சுதாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 துணை கோட்டங்களில் சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, காஞ்சி தாலுகா, மாகரல், உத்திரமேரூர், சாலவாக்கம், பெருநகர், பாலுசெட்டி சத்திரம், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ஆகிய 12 காவல் நிலையங்களும், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையம் என மொத்தம் 14 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த காவல் நிலையங்களில் கடந்த 7 மாதங்களில் 2 கொலை வழக்குகள், 10 வழிப்பறி வழக்குகள், 23 வீடு புகுந்து திருடிய வழக்குகள் மற்றும் 65 திருட்டு வழக்குகள் என மொத்தம் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 91 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற வழக்குளில் களவுபோன சொத்துகளின் மதிப்பு ரூ.1.54 கோடி என கண்டறியப்பட்டுள்ளது. இதில், 9 வழக்குகள் தவிர மற்ற 91 வழக்குகள் துரிதமாக அறிவியல் நுட்பத்தை பயன்படுத்தி ரூ.1.46 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 20 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.23.55 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.