புதுடெல்லி: மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இதுவரை திரைப்படங்களை “யூ”, “ஏ” மற்றும் “யூஏ” ஆகிய பிரிவுகளில் திரையிடுவதற்கான அனுமதி வழங்கி வந்தது. மாறி வரும் திரைப்பட உள்ளடக்கங்களை கருத்தில் கொண்டு கடந்த அக்டோபர் 24ம் தேதி முதல் அனுமதி வழங்கும் திரைப்படங்கள், “யூ”, “ஏ”, “யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என்னும் பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதில் “யூ” வகை திரைப்படங்கள் எல்லா வயதினருக்கும் உகந்தவையாகும்.
“ஏ” வகையில் அனுமதிக்கப்படும் படங்கள் 18 வயது கடந்தவர்கள் மட்டுமே காண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை. அதற்குக் குறைவான வயதுடையவர்கள் காண அனுமதி இல்லை. திரைப்படங்களில் குழந்தைகளுக்கு ஒவ்வாத வன்முறை/ பயமுறுத்தும் காட்சி அமைப்புகள், நெருக்கமான அல்லது கிளர்ச்சியூட்டும் காட்சிகள், அடிமைப்படுத்தும் பழக்கங்கள், விபரீதமான நடத்தைகள் போன்ற அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அவை பார்வையாளர் மேல் உண்டாக்கும் தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததாக “யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என வகைப்படுத்தப்படும்.
“யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என்று பரிந்துரைக்கப்படும் திரைப்படங்களில், தங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் அந்த திரைப்படத்தை பார்க்க அனுமதிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன் அத்திரைப்படத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவொரு திரைப்படத்தின் சான்றிதழ் (வயது மதிப்பீடு) விவரங்களை அறிய, பெற்றோர்கள் cbfcindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.