Wednesday, November 29, 2023
Home » நிஜ வாழ்க்கையில் நிழல் கிரகங்களின் ஆதிக்கம்!

நிஜ வாழ்க்கையில் நிழல் கிரகங்களின் ஆதிக்கம்!

by Kalaivani Saravanan

ராகு-கேது பெயர்ச்சி 8-10-2023

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

சாயா (நிழல்) கிரகங்கள் எனப் பண்டைய ஜோதிட நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள ராகு, கேது ஆகிய இரு கிரகங்களின் ராசி மாறுதல்கள் மக்களிடையே அதிக ஈடுபாட்டையும், அச்சத்தையும் ஏற்படுத்திவருவது அனைவரும் அறிந்ததே! ஒரு ராசியைக் கடப்பதற்கு, சுமார் 15 மாதங்கள் எடுத்துக்கொள்ளும் ராகுவும், கேதுவும் நமது ராசி மண்டலத்தில், அப்பிரதட்சணமாக (anti-clockwise) வலம் வருவதாக, ஜோதிட கணிப்பில் கருதவேண்டும் என ஜோதிடக் கலை விதிகள் விவரித்துள்ளன.

மனித வாழ்க்கையின், ஒவ்வொரு அம்சத்திலும் இந்த ராகு, கேது ஆதிக்கம் இருப்பதை புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. அதர்வண வேதத்திலும், இந்த ராகு, கேது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. “எனது பெண்ணின் ஜாதகத்தில், ராகு தோஷம் இருக்கிறதா…?” என ஜோதிடரிடம் கேள்வி கேட்பவர்களின் முகத்தில் காணப்படும் கவலையையும், பீதியையும் உற்றுக் கவனித்தால், எந்தளவிற்கு இந்த ராகு, மக்களின் மனதை ஊடுருவியுள்ளது என்பது தெரியும். இத்தகைய வீரியம் கொண்டுள்ள இந்த ராகு, கேது யார்…?

மேலைநாட்டு வானியல் அறிஞர்கள், இந்த ராகு – கேதுவை “Nodes” என்றழைக்கின்றனர்! பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, எகிப்து, பாரசீகம், கிரீஸ், சீனா, பாலஸ்தீனம், ேராமானிய சாம்ராஜ்யம் ஆகியவை வானியல் கலையில், பெரும் புகழ்பெற்று விளங்கின. பாரத தேசத்தில் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக் கழகம் மற்றும் தட்சசீலம் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் மேற்கூறிய நாடுகளின், மாணவர்கள், இந்திய மாணவர்களுடன் இணைந்து வானியல் கலையைக் கற்றுவந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

பிரசித்திப் பெற்ற சீன யாத்ரிகரான “யுவான்சுவாங்” அவர்களும், ஏராளமான மாணவ, மாணவியர் பாரத கலாசாலைகளில், வானியல் கலையைக் கற்று வந்ததைத் தனது குறிப்புகளில் எழுதிவைத்துள்ளார். உண்மையில், ராகு என்பது, கிரகங்களின் நாயகர் எனப் பூஜிக்கப்படு்ம், சூரியமண்டலத்தின் மேற்பகுதியிலுள்ள, காந்தப்பகுதியே (Magnetic field) ராகு ஆகும். அதற்கு நேர் கீழே உள்ள மற்றொரு காந்தப் பகுதி, கேதுவாகும். நாம் வசிக்கும் கிரகமான பூமி, சூரியனை வலம் வரும்போது, ஏதோ ஒரு காலகட்டத்தில், இந்த காந்தப் பகுதிகளினால் ஈர்க்கப் படுவதால், கிரக சஞ்சார நிலைகளைக் கணக்கிடும்போது, ராகு- கேதுவின் ஈர்ப்பு சக்திகளையும், கணக்கிலெடுத்துக்கொள்கிறோம்.

புராணத்தில் ராகுவும், கேதுவும்! அமுதம் வேண்டி, தேவர்களும் அசுரர்களும் வாசுகி எனும் நாக சர்ப்பத்தை கயிறாகவும், மந்திரகிரியை மத்தாகவும் கொண்டு, பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் தோன்றியவுடன், தங்களுக்கு மட்டும்தான் அமுதம் கிடைக்க வேண்டுமென்று, அசுரர்கள் அமுதக் குடத்தை எடுத்துக்கொண்டு ஓட முயன்றனர். நிலைமையை உணர்ந்த பகவான், மந் நாராயணன் உடனடியாக, தன்னிகரற்ற – பேரழகு, மோகினியாக உருமாற்றிக்கொண்டு, அசுரர்களைச் சமாதானப்படுத்தி, அமுதக் கலசத்தைக் கைப்பற்றி, அசுரர்களையும் தேவர்களையும் இருவரிசையில் அமரச் செய்து, அமுதத்தைப் பரிமாறினார்.

முதலில் தேவர்களின் வரிசையில் மட்டும்தான் பரிமாற ஆரம்பித்தார். அதைக் கண்டுவிட்ட, அசுரர்களில் ஒருவரான, ராகு தன்னை தேவர்களில் ஒருவர்போல் உருமாற்றிக்கொண்டு, தேவர்களின் வரிசையில், அமர்ந்துகொண்டார். இதனை சந்திரனும், சூரியனும் கண்டுவிட்டனர். அதனைக் குறிப்பால் மோகினிக்கு உணர்த்திவிட்டனர். ஆயினும், அதற்குள் கரண்டியிலிருந்த அமுதத் துளி ராகுவின் வாயில் விழுந்துவிட்டது.

இதனைக் கண்டு பதறிய மோகினி, கையிலிருந்த அகப்பையினால் ராகுவின் சிரசில் தட்டி, ராகுவின் உடலை இருகூறாக்கி, தொண்டையின் கீழ் அமுதத் துளி செல்லாமல் தடுத்துவிட்டார். இருகூறாக்கப்பட்ட ராகுவின் தலைப் பாகம் கேதுவாகவும், தலைக்குக் கீழ்பாகம் ராகுவாகவும் மாறினர். மோகினியாகத் தோற்றமளித்த பகவானைச் சரணடைந்தனர். அதனால் மகிழ்ந்த எம்பெருமான், அவர்களுக்கு, கிரக அந்தஸ்தை அளித்தருளினார்.

சூரியன் – சந்திரன் மீதான சீற்றம்!

தங்களை, கண் ஜாடை மூலம் மோகினியிடம் காட்டிக்கொடுத்த சூரியன் மற்றும் சந்திரன் மீது ராகுவிற்கும், கேதுவிற்கும் சீற்றம் தணியவில்லை! ஆதலால், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் சூரியன், சந்திரன் வலம் வரும் பாதையில், நின்று, தடுக்கலாயினர். அவ்விதம் எப்போதெல்லாம் ராகுவினாலோ அல்லது கேதுவினாலோ, சூரிய-சந்திரர்கள் பீடிக்கப்படும் காலத்தை “தோஷகாலம்”, “கிரகண காலம்” என்றும் நீதிநூல்கள், தர்மநூல்கள், வானியல் (ஜோதிடம்) கலை ஆகியவை கூறுகின்றன.

சூரிய கிரகண காலத்தின்போது, கிரகண ஆரம்ப நேரத்திலும், சந்திர கிரகணத்தின்போது கிரகணம் விட ஆரம்பிக்கும்போதும் மறைந்த நமது முன்னோர்களுக்கு (தர்ப்பணம்) செய்வது மகத்தான புண்ணியத்தை நமக்கும் நமது சந்ததியினருக்கும் அளிக்கும். குடும்பத்தினரைப் படுத்திவரும் நோய்கள், மனக்குறைகள், வறுமை போன்ற துன்பங்கள் பித்ருக்களின் ஆசிகளினால் தீரும். கிரகண காலத்தின்போது, ஏழையருக்குத் தானம் செய்வதும், புண்ணிய நதிகளிலும், கடலிலும், புண்ணிய புஷ்கரணியிலும் நீராடுவது மகத்தான புண்ணியத்தைப் பெற்றுத் தரும். பல தலைமுறைகள் பாவங்கள் தீரும்.

கிரகண காலத்தின்போது சாப்பிடக் கூடாது. ஏனெனில், நம் உடலில் நரம்புப் பகுதிகள் பலகீனமாக இருக்கும். இதனை ஆயுர்வேதமும் விளக்கியுள்ளது. சக்தியுள்ளவர்கள் கிரகண காலத்தின்போது, காவிரியின் உற்பத்தித் தலமாகிய தலைக்காவிரி, ஹரித்துவார், ரிஷிகேஷ், பிரயாகை, காசி, ராமேஸ்வரம், புஷ்கரம், குருேக்ஷத்திரம் போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடுவது ஈடிணையற்ற புண்ணிய பலனைத் தரும்.

குருஷேத்திரத்தில், கிரகண தினத்தன்று அளிக்கும் பிண்ட தானத்தை நமது முன்னோர்கள், தர்ம ராஜர், சூரிய பகவானின் அனுமதி பெற்று, நேரில் வந்து பெற்றுக்கொள்வதாக ரகசிய கிரந்தங்கள் கூறியுள்ளன. கிரகண சமயத்தில், நாம் சொல்லும் ஸ்தோத்திரங்கள், துதிகள், புனித ராம நாமங்கள் ஆகியவை நமக்கு சித்தியாகும்.

ராகு – கேதுவைப் பற்றிய தவறான கருத்துக்கள்!

இந்த இரு நிழல் கிரகங்களும், தாங்கமுடியாத துன்பத்தை மட்டுமே செய்வார்கள் என்ற முற்றிலும் தவறான கருத்துகள் காலங்காலமாக மக்களின் மனத்தில், வேரூன்றிவிட்டன. இத்தகைய கருத்து முற்றிலும் தவறானது. அதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.

“ராகுவைப் போல், கொடுப்பாரில்லை!
ராகுவைப் போல் கெடுப்பாருமில்லை!!”

என்றொரு மூதுரை காலங்காலமாக மக்களிடையே நிலவிவருகிறது. ராகுவின் சக்தியைச் சரியாகப் புரிந்துகொள்ளாததே இத்தகைய தவறான கருத்துக்குக் காரணமாகும். நன்மையானாலும், தீமையானாலும், ராகு தயா தாட்சிண்யமின்றிக் கண்டிப்பாகச் செய்வதனால், இத்தகைய கருத்து உருவாகியுள்ளது. ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5ம் இடத்திலும், வாழ்க்கையின் முடிவையும் மறு பிறவியையும் நிர்ணயிக்கும், 12ம் இடத்திலும் ராகு அல்லது கேது அமர்ந்திருந்தாலும், வாழ்க்கை முடியும் கடைசி விநாடியில், கங்கா ஸ்நான பலன் கிடைக்குமென சூட்சும கிரந்தங்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளன.

பிறவியில், தர்மநெறியின்படி, நேர்மை, ஒழுக்கம், சத்தியம், தர்மம், வாய்மை ஆகியவற்றின்படி வாழ்ந்தால், ராகுவிற்கும், கேதுவிற்கும் அச்சப்படவேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும், சில ஜாதகங்களில் ராகு, யோக பலன்களை அளிக்கும் நிலையில் அமைந்திருந்தால், ராஜயோகத்தைத் தந்திடுவார்! இருப்பினும், அந்த யோகத்தைத் தவறான வழியில் தந்திடுவார்.
ஒவ்வொரு ராசியிலும் ராகுவும், கேதுவும் சுமார் 15 மாதங்கள் சஞ்சரிப்பார்கள். வக்கிரம், அதிசார கதி மாறுதல்கள் இவ்விரு நிழல் கிரகங்களுக்கும் கிடையாது! இவ்விரு கிரகங்களினால் ஏற்படும் அனைத்து தோஷங்களும், எளிய பரிகாரங்களுக்கு உட்பட்டவையே!!

ராகு, கேது பரிகாரத் தலங்களாக திருநாகேஸ்வரம், திருக்கொள்ளிக்காடு, திருக்காளஹஸ்தி, திருநெல்வேலி மாவட்டத்தையடுத்த, சங்கர நாராயணன் திருக்கோயில், கர்நாடக மாநிலத்திலுள்ள நாகமங்களா, கீழ்ப்பெரும்பள்ளம், திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருப்பாம்புரம் ஆகிய மிகப் புராதன திருத்தலங்கள் விளங்குகின்றன. இனி வரப்போகும் பல மாதங்களுக்கு, ராகு, கேதுவின் மீன, கன்னி ராசி மாறுதல்களினால், அந்தந்த ராசியினருக்கு ஏற்படவிருக்கும் பலா-பலன்களை டிகிரி சுத்தமாகக் கணித்து ஆராய்ந்து பார்த்து, அளிப்பதில், அளவற்ற மனநிறைவைப் பெறுகிறோம்.

நமது வேதகால மகரிஷிகளும், அவதாரப் புருஷர்களும், மகான்களும் அறிந்து கூறியுள்ள, மிக அரிதான பரிகாரங்களையும் ஆங்காங்கே கூறியுள்ளோம். இவையனைத்தும் ஆதாரப் பூர்வமானவை. கடைப்பிடிப்பதற்கு மிகவும் எளிதானவை. நம் முன்னோர்கள் கையாண்டவை.

கால சர்ப்ப தோஷம்!

ஜனன கால ஜாதகத்தில், ராகு நின்ற ராசிக்கும், கேது அமர்ந்துள்ள ராசிக்கும் இடையே மற்ற ஏழு கிரகங்களும், லக்னமும் நிலைகொண்டிருந்தால், “கால சர்ப்ப தோஷம்” ஏற்படுவதாக சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, விவாகத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது, இந்தத் தோஷம் இல்லாமல் இருக்க வேண்டுமே என்று ஏராளமான பெண்களின் பெற்றோர்களுடைய கவலையாகும்.

ஜோதிடக்கலையின் ஆதாரநூல்கள் எனப் பெரியோர்களாலும், மகான்களாலும் போற்றப்படும், “பூர்வ பாராசர்யம்”, “ஜோதிட ரத்னாகரம்”, பிருஹத் ஸம்ஹிதை” “பிருஹத் ஜாதகம்”, “ஜோதிட அலங்காரம்” ஆகிய மிகப் புராதனமான ஜோதிடநூல்களில் காலசர்ப்ப தோஷம் பற்றிக் கூறப்படவில்லை! ஆனால், பிற்கால நூல்களில்தான் இந்தத் தோஷம்பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது, காலதோஷம் பற்றிக் கவலைப்படாமல், ராகு மற்றும் கேதுவின் சஞ்சார நிலைகளையும் ராகு, கேதுவின் தசாக் காலம் ஏற்படுவதையும் ஆராய்ந்தாலே, ராகுவினாலோ, கேதுவினாலோ தோஷம் ஏற்படுமா? ஏற்படாதா? என்ற விவரங்கள் மிகத் துல்லியமாகத் தெரிய வரும். ஆதலால், பெண்ணைப் பெற்றவர்கள், இந்தத் தோஷம் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை!!

இனி, இம்மாதம் புரட்டாசி 21ம் தேதி நிகழவுள்ள ராகு மற்றும் கேது இரு நிழல் கிரகங்களின் ராசி மாறுதல் பலன்களை விரிவாகக் காண்போம்! இங்கு கூறியுள்ள பலன்கள் அனைத்தும், டிகிரி சுத்தமாகக் கணிக்கப்பட்டுக் கூறப்பட்டுள்ளவையேயாகும்.

ராகு-கேதுவின் நிலை!

“ஸிம்ஹிகை” எனும் அசுரப் பெண்மணிக்குப் பிறந்தவர் ராகு! மகா விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் இயற்றி, அதன் பலனாகக் கிரகப்பதவியை அடைந்தவர். அரசனை ஆண்டியாகவும், ஆண்டியை அரசனாகவும் மாற்றும் வல்லமை படைத்தவர் ராகு. நற்பலனாலும், ெகடுபலனாலும், தயை, தாட்சண்யமின்றிச் செய்வதால், உலக மக்களுக்கு ராகு என்றாலேயே அச்சம் ஏற்பட்டுவிடுகிறது. ஆதலால்தான், “கொடுப்பதிலும், கெடுப்பதிலும் ராகுவிற்கு இணையில்லை…!” என்ற கருத்து நிலைபெற்றுவிட்டது.

“குடை கீழிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து, ஓர்ஊர் நண்ணிலும் நண்ணுவர்…!” (குஞ்சரம் : யானை) என விதியின் வலிமையை வர்ணித்துள்ளனர், நம்முன்னோர். அந்த “விதி”யைச் செயல்படுத்துவது ராகுவே! “ஜெனனகால ஜாதகத்தில் ராகு, சுப பலம் பெற்று, குரு, சுக்கிரன் ஆகியோரின் சேர்க்கை அல்லது சுபப்பார்வை பெற்றிருப்பின், அதிர்ஷ்டத்தை அள்ளித் தந்துவிடுவார் – ஒரே இரவில்….!” எனக் கூறுகிறது, “பூர்வ பாராசர்யம்” எனும் ஜோதிடக் கிரந்தம். ஆயினும், அந்த அதிர்ஷ்டத்ததைத் தவறான வழிகளில் தருவார், ராகு! (லாட்டரி, குதிரைப் பந்தயம், பிறரை ஏமாற்றுவது, கலப்பட வியாபாரம் போன்ற தவறான வழிகளில் பெற்றுத் தருவார்).

ஜாதகத்தில், அசுப பலம் பெற்றிருந்தால், தாங்குவதற்கு இயலாத துன்பங்களைத் தருவார், ராகு. சூரிய வம்ச மன்னரான அரிச்சந்திரன், நிடத நாட்டு அரசனான நளன் ஆகியோர் ராகுவின் நிலைகளினால்தான் விவரிக்க இயலாத துன்பங்களை அனுபவித்தனர். அரசியலில் வெற்றி பெறுவதற்கு ஜாதகத்தில் ராகுவின் நிலை உயர்ந்த சுபபலம் பெற்றிருக்க வேண்டும் என்பதை “அர்த்த சாஸ்திரம்” கூறுகிறது. சுக்கிரன், சனி, புதன் ஆகிய மூவரும் ராகுவிற்கு நட்புக் கிரகங்களாவர். குரு, சூரியன், சந்திரன் மூவரும் பகைவர்கள்.

மானிட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தலையிடும் உரிமை ராகுவிற்கு உண்டு! தகாத உறவுகள், மோசடி, தேசத் துரோகம், பிடிவாதம், முன்கோபம், சூதாட்டம் ஆகியவற்றிற்கு ஆதிக்கம் கொண்டவர் ராகு கிரகம். இருப்பினும், “சுபக் கிரகங்களுடன் இணைந்திருந்தால், அளவற்ற நன்மைகளையும் செய்வார், ராகு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுபக் கிரகங்கள், அமைந்து, லக்கினத்திலிருந்து 12ம் இடத்தில் ராகு அமர்ந்திருந்தால், கங்கா ஸ்நானம் பாக்கியம் கிட்டும்….” என்று கூறுகிறது “ஜோதிட அலங்காரம்”.

ராகு தோஷத்திற்கு, கோமேதகம், ரத்தினம் பதித்த மோதிரம் அணிவது சிறந்த பரிகாரமாகும், ராகு – கேதுவிற்கு, விருச்சிகம், உச்ச ராசியாகும். ரிஷபம் நீச்ச ராசி. ஜாதகத்தில் ராகு தோஷம் இருப்பின், சனிக்கிழமைகளில் ஆலயம் ஒன்றில் தீபங்கள் ஏற்றிவருவது சிறந்த பலனளிக்கும் பரிகாரமாகும். வேதவியாச பகவான் அருளிய கீழ்க்கண்ட ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி அவரை வழிபட்டுவந்தாலும், ராகுதோஷம் அடியோடு விலகும்.

“அர்த்தகாயம் மகாவீர்யம் சந்திராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம்ராகும் ப்ரணமாம்யஹம்”

திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, திருபாம்புரம் போன்ற திருத்தலங்கள் சக்திவாய்ந்த ராகு பரிகாரத் தலங்களாகும்.

கேது!

ஜோதிடக் கலையில் “மோட்ச காரகன்” எனப் போற்றப்படும் கேது, மனதைப் பக்திநெறி, எளிமை, தூய்மை ஆகியவற்றில் செலுத்த உதவும் சக்தி பெற்றவர். ஜாதகத்தில் கேதுபலம் பெற்றிருப்பின், உலக பந்தங்களிலிருந்து மனதை விடுவித்து, ஆன்மிகச் சிந்தனைகளில் தீவிரப் பற்று ஏற்படுத்தும் வலிமை பெற்றவர். அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்த நிகழ்ச்சியில் மோகினியான பகவான், ராகுவின் தலையைத் துண்டித்தபோது, ராகுவின் தலைப்பகுதிதான், கேதுவாக ஆயிற்று. பகவான் விஷ்ணுவைக் குறித்து தவமியற்றி, நவக்கிரகங்களில் ஒருவரானார்.

ஜாதகத்தில் கேது சுப பலம் பெற்றிருப்பின், சகல ஸௌபாக்கியங்களையும் நேர்மையான வழியில் பெற்று, இறுதியில் மோட்சத்தையும் பெறச்செய்வார். விருச்சிகம், இவரது உச்சராசி. ரிஷபம் நீச்சராசி. சுக்கிரன், புதன், சனி நட்புக் கிரகங்கள். குரு, சூரியன், சந்திரன், பகைக்கிரகங்கள். கீழ்க்கண்ட, வியாசபகவான் அருளிய கேது ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டுவந்தால், பல நன்மைகளையும் அளித்தருள்வார்.

“பலாஸ புஷ்பஸங்காஸம் தாரகா கிரகமஸ்தகம் ரௌத்ரம் ரெத்ராதமகம கோரம் தம்கே தும்ப்ரணமாம்யஸம்”

ராகு-கேது ராசி மாறுதலின் மாறுபட்ட கருத்துகள்!

ராகு, கேது பெயர்ச்சியின் நேரம், தேதி ஆகியவற்றில் வாக்கியக் கணித முறைக்கும், திருக்கணித முறைக்கும் வித்தியாசங்கள் உள்ளன. வாசக அன்பர்கள், அதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், ராசி மாறுதலுக்கு பல மாதங்கள் முன்னதாகவே, மாறவுள்ள ராசி பலன்களைக் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் – ராகுவும், கேதுவும்!

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?