Friday, July 19, 2024
Home » நிஜத்தில் வில்லன்கள்

நிஜத்தில் வில்லன்கள்

by Karthik Yash

மக்களின் ஆதரவை பெற்றுவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சட்டவிரோத செயல்களில் ஈடுபடலாம். கண்ணிய குறைவாக நடந்து கொள்ளலாம் என்று சிலர் நினைக்கின்றனர். அரசியல் பதவியில் இருப்பவர்களும், மக்களால் கொண்டாடப்படுபவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படியொரு உதாரணம் தான் சமீபத்தில் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது. ஹாசன் தொகுதி மக்களவை தொகுதி முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, இவரை தொகுதி மக்களுக்கு சேவை செய்ய தேர்வு செய்தனர். ஆனால் இவர் தனது அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தி பல பெண்களை மிரட்டி தவறாக நடந்து கொண்டார். அதுமட்டுமின்றி அதை வீடியோவும் எடுத்துவைத்து கீழ்தரமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

மக்களால் ஆச்சர்யமாக பார்க்கப்படும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தங்களது நன்னடத்தை, பண்பு, அன்பு, குணம், சேவை ஆகியவற்றின் மூலம் மக்களால் கொண்டாடப்படும்படி நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களது பொதுவாழ்வு நிலைக்கும். சட்டம் நம் கையில் என்று அத்துமீறினால் ஒரு நாள் உரிய தண்டனை கிடைத்துவிடும். அப்படித்தான் பிரஜ்வல் ரேவண்ணா, யாருக்கும் தெரியாது என்று நினைத்து செய்த தவறுகள் நாடு முழுவதும் பரவி மிகப்ெபரிய தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டது. இவரது வில்லத்தனமான நடவடிக்கைகளால் தற்போது சிறையில் இருக்கிறார்.

மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது அவர்களை பின்பற்றுபவர்கள் எப்படி நல்ல மனிதர்களாக உருவாக முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதே போல் சாண்டல்வுட் ஹீரோவான நடிகர் தர்ஷன் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இவரது படங்களை மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். அப்படி வெள்ளித்திரையில் நல்ல பெயரை சம்பாதித்த இவர் தற்போது நிஜ வாழ்க்கையில் வில்லனாக மாறிவிட்டார். திருமணம் தாண்டி இவருடன் ஒரு பெண் உறவில் இருந்துள்ளார். இவர் குறித்து ரேணுகாசாமி என்பவர் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியுள்ளார்.

இந்நிலையில் அவர் கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரை யாரோ கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கைது செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நடிகர் தர்ஷன் பெயரை சொல்ல, உடனே போலீசார் கொலையான ரேணுகா சாமியின் சமூகவலைதளத்தை ஆய்வு செய்தனர். அப்போது தான் தர்ஷனின் காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா குறித்து இவர் அவதூறு செய்து குறுஞ்செய்திகள் பதிவிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர்.

லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் கதாநாயகனாக வீற்றிருக்கும் தர்ஷன் நிஜவாழ்க்கையில் வில்லனாக இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பவுன்சர்களை வைத்து தன் கண்ணெதிரே சம்மந்தப்பட்டவரை தர்ஷன் தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவரும் என்று நம்பப்படுகிறது. ஆதாரங்கள், சாட்சிகளை அழித்துவிடவோ, மறைக்கவோ முடியாது. எனவே தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. பணம், புகழ், அதிகாரம் என்று நிறைவான வாழ்க்கை கிடைத்தும் சிலர் அற்ப விஷயங்களுக்காக சறுக்கிவிடுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi