சென்னை: வீடு மற்றும் மனை வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலைக் கட்டுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் நிறுவப்பட்டது. இதன் மூலம் அனைத்து ரியல் எஸ்டேட் தொடர்பான திட்டங்களும் குறிப்பாக வணிக மற்றும் குடியிருப்பு சொத்துக்கள் தொடர்பான திட்டங்கள் ஆணையத்தில் பதிவு செய்யப்படவேண்டியது அவசியம். இந்த ஆணையத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசு தரப்பில் தேர்வு குழு நியமிக்கப்படும். இந்த தேர்வுக்குழுவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவர் பரிந்துரைக்கும் நபர் இருப்பார். தேர்வு குழு தேர்ந்தெடுத்து அளிக்கும் நபர்களில் இருந்து தலைவரை தமிழக அரசு தேர்ந்தெடுக்கும். இந்த ஆணைய தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார்.
அவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இதையடுத்து முன்னாள் டிஜிபி சுனில்குமாருக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் டிஜிபி சுனில்குமார் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக சிவ் தாஸ் மீனாவை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா அரசாணை வெளியிட்டுள்ளார்.