சென்னை: ஆயுத்த ஆடைகள் மீது 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உற்பத்தியாளர்கள் இதனால் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். 5% ஜி.எஸ்.டி. வரியை 18% ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. ரூ.1,500 முதல் ரூ.10,000 வரையுள்ள ஆயுத்த ஆடைகளுக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ரூ.10,000 க்கு மேல் விலையுள்ள ஆயுத்த ஆடைகள் மீது 28% ஜி.எஸ்.டிவிதிப்பது அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆயுத்த ஆடைகள் மீதான ஜி.எஸ்.டியை உயர்த்துவதால் விற்பனை பாதிக்கும் என ஆயுத்த ஆடை உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆயுத்த ஆடைகள் விற்பனை பாதிக்கப்பட்டால் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி உயர்வால் நூற்பாலைகள், பின்னலாடை மற்றும் ஆயுத்த ஆடை தயாரிப்பு தொழில் பாதிக்கப்படும் என்றும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஜி.எஸ்.டி. வரி உயர்வால் ஆயுத்த ஆடை தொழிற்துறையில் வருமானம் 25% குறையும் என்றும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே வரியை உயர்த்தும் பரிந்துரையை கைவிடுமாறும் ஆயத்த ஆடை தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.