ஆலயம்: அடாலஜ் படிக்கிணறு குஜராத் மாநிலத்தின் பெருநகரமான அகமதாபாத்திலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ளது.
காலம்: பொ.ஆ.1499 ஆண்டில் வகேலா அரச வம்சத்தை சேர்ந்த ராணி ரூதா பாய்-ஆல் கட்டப்பட்டது.
மழை நீர் சேகரிப்புக்காகவே கட்டப்பட்ட இந்த அற்புத படிக்கிணற்றுக் கட்டடத்தின் கட்டுமானத்தில் இழையோடும் போர், காதல், துன்பியல் நிகழ்வுகள், இந்த கிணற்றின் கலைச்சிற்ப அழகியல் நுணுக்கத்தைப் போலவே மனதில் ஒட்டிக்கொள்கின்றது.
படிக்கிணறுகள்:
குஜராத் மாநிலத்தின் பல பகுதிகள் நதிகள் இல்லா வறண்ட, பாலைவனப் பிரதேசங்கள். எனவே, பருவமழை நீரைச் சேமித்து, பாதுகாத்து வைத்து கோடை மற்றும் வறட்சிக்காலங்களிலும் உபயோகித்துக்கொள்ள தனித்துவ அமைப்புகளுடன் கூடிய பெருங்கிணறுகளை ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை குஜராத் மன்னர்கள் கட்டியுள்ளனர். மழைக்காலங்களில் மழைநீர் அனைத்தும் கிணற்றுக்குள் சென்று விழும் வகையிலும், கோடை காலத்தில் சூரிய வெப்பத்தினால், நீர் ஆவியாகாத வகையிலும் கிணறுகளினுள் கட்டடங்களை கட்டயுள்ளனர். குஜராத்தில் மட்டும் இவ்வகைக் கிணறுகள் 120க்கும் மேல் உள்ளன. இவ்வகை படிக்கிணறுகளில் பதான்-இல் உள்ள ‘ராணி-கி-வாவ்’ மற்றும் அகமதாபாத் அருகில் ‘அடாலஜ்-நி-வாவ்’ மிகவும் புகழ் பெற்றவை.
அமைப்பு:
தரை மட்டத்திலிருந்து பார்க்கும் போது ஒரு மேடிட்ட சிறிய கட்டடம் போல் காட்சியளிக்கும் இந்தக் கிணற்றினை, உள்ளே சென்று பார்க்கும் போது வியப்பினால் விழிகள் விரிகின்றன.
344 படிகள் கீழிறங்கிச்செல்லும் போது புறாக்களும், வவ்வால்களும் நம்மை வரவேற்கின்றன. ஒவ்வொரு படியாக இறங்கும்போது, வெறும் கிணறு என்ற எண்ணம் தோன்றாமல், ஏதோ ஒரு பெரும் கலை அமைப்புடன் கூடிய பாதாளச் சிற்ப லோகத்தினுள் நுழைவது போல் பிரமிப்பு தோன்றியது.
பொது மக்களின் நீர்த் தேவைகளுக்கெனவே இக்கிணறு அமைக்கப் பட்டிருந்தாலும், அந்த முக்கியக்குறிக்கோளைத் தாண்டி ஒரு கலைக்கோவிலாக அமைக்கப்பட்டிருப்பது இந்த ‘அடாலஜ் நி வாவ்’ கிணற்றின் சிறப்பு. வாவ்’ என்கின்ற சொல்லுக்கு குஜராத்தி மொழியில் ‘படிகளுடன் கூடிய கிணறு’ என்று பொருள்.
ராணி ரூதா பாய்:
‘அடாலஜ் நி வாவ்’ பொ.ஆ.1499 ஆண்டில் வகேலா அரச வம்சத்தை சேர்ந்த ராணி ரூதா பாய்-ஆல் கட்டி முடிக்கப்பட்டதா? அல்லது ராணி ரூதா பாய்க்காக கட்டி முடிக்கப்பட்டதா? இது குறித்து நிலவி வரும் செவிவழி வரலாறு:பொ.ஆ. 1499 ஆண்டில் ‘தன்டாய் தேஷ்’ என்றழைக்கப்பட்ட இந்த பிரதேசம், ரானா வீர் சிங் என்ற வகேலா வம்ச மன்னரால் ஆளப்பட்டு வந்தது. ரானா வீர் சிங்கால் அடாலஜில் இந்த 5-அடுக்கு படிக்கிணற்றுக்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டு, கட்டுமான, சிற்பப்பணிகள் முழுவீச்சில் நடந்துவந்தது.
அப்போது அருகிலுள்ள நாட்டு முஸ்லிம் மன்னரான முகமது பேக்தா தன்டாய் தேசத்தின் போர் தொடுத்தார். போரில் ரானா வீர்சிங் கொல்லப்பட்டதால் தன்டாய் தேசம் முகமது பேக்தாவின் ஆளுகையின் கீழ் வந்தது. காலமான ரானா வீர் சிங்கின் மனைவி ராணி ரூதா பாயின் பேரழகினால் கவரப்பட்ட முகமது பேக்தா, ராணியை மணம்புரிய விருப்பம் கொண்டார்.
கணவர் காலமானதில் மனம் உடைந்திருந்த ராணியிடம், முகமது பேக்தாவின் மணம் முடிக்கும் ஆசை தெரிவிக்கப்பட்டது. பேக்தாவின் காதல் கண்டு கலக்க மடைந்த ராணி ரூதாபாய், நீண்ட யோசனைக்குப்பின் இதற்கு ஒரு உறுதியான வேண்டுகோளுடன் பதிலளித்தார்.
‘தன் கணவரால் திட்டமிடப்பட்டு, போரினால் தடங்கல் பட்டிருக்கும் அடாலஜ் படிக்கிணற்றின் எஞ்சிய பணிகளைச் சிறப்பாக முடித்துத் தந்தால் இது குறித்து பதிலளிப்பதாக’க் கூறினார்.
ராணியின் இந்த பதிலினால் உற்சாகமடைந்த முகமது பேக்தா, இதற்கு ஒப்புக் கொண்டு பெரும் உத்வேகத்துடன் கட்டுமானப்பணிகளை முடுக்கி விட்டார். ராணியின் மீதிருந்த காதலின் வேகத்தில் மீதமிருந்த சிற்ப, கட்டடப் பணிகள் விரைந்து நிறைவேறின.
குறுகிய காலத்தில் பணிகளை முடித்த பின் ராணியிடம் தன் திருமண விருப்பத்தை திரும்பவும் வலியுறுத்தினார் பேக்தா. ராணி, தன் கணவரின் கனவான கலைக்கட்டடம் எப்படிக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என்பதை நேரில் காண விழைந்தார். அடுத்த நாள் காலையில் தன் பணிப்பெண்கள் சூழ கிணற்றினை வலம் வந்த ராணி ரூதாபாய், மேற்கூரைப்பகுதியில் நின்று சில நிமிடங்கள் மந்திரங்கள் ஜெபித்த பின், யாரும் எதிர்பாரா வண்ணம் திடீரென கிணற்றினுள் குதித்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.
‘ரானா வீர்சிங் மனைவி ராணி ரூதாபாய்-ஆல் பொது மக்களின் பயன்பாட்டிற்கென கட்டப்பட்டது’ என்று வருடக்குறிப்புடன் பொறிக்கப்பட்ட வரலாற்று ஆதாரம் முதல் தளத்தில் கிழக்குப்பகுதியில் உள்ள பழங்கால சமஸ்கிருத கல்வெட்டில் காணப்படுகின்றது. மேலும், ராணி ரூதாபாயின் உயிர்த்தியாகம் குறித்த தகவல்கள், குஜராத்தின் புகழ்பெற்ற சுவாமி நாராயண் வழிபாட்டு பிரிவினரின் இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய சுவடிகளிலும் காணப்படுகின்றன.
சிற்பக்கலை:
சுவர், தூண், உத்திரம், கதவு நிலை என ஒவ்வொரு இடத்திலும் மிகுந்த நேர்த்தியுடன் கூடிய அலங்கார சிற்ப நுணுக்கங்கள் விரவியிருப்பத்தைக் காணுகையில் ஏற்படும் பிரமிப்பிலிருந்து மீண்டு வரவே நீண்ட நேரமாகிறது.இலை, பூ, பறவை, விலங்கு, மேகம், இயற்கை, நடனம், போர் மற்றும் புராணக்காட்சிகள் போன்றவற்றின் எழில் மிகு தொடர் உருவங்களிலான ‘Motif’ வகை சிற்பங்கள் நேர்த்தியுடன் செதுக்கப்பட்டுள்ளன.
இந்துக் கட்டடக் கலை வடிவ அடிப்படையில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பின் முடிக்கும் போது இஸ்லாமியக் கட்டடக் கலையின் தாக்கம் இருப்பது சில இடங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. இறை வழிபாட்டுக்கென எழுப்பப்பட்ட எழில்மிகு சிற்றாலயங்கள் இப்போது எவ்வித தெய்வங்களும் இன்றி வெறுமையாக உள்ளன.
மது ஜெகதீஷ்