ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், காலியாக இருக்கும் எம்பி, எம்எல்ஏ பதவிகளுக்கு 6 மாதங்களுக்குள்ளும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுதான் நமது நாட்டின் ஜனநாயக தேர்தல் விதிமுறை. ஆனால் ஜம்மு காஷ்மீரில் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் சட்டப்பேரவை கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. காரணம் மோடி அரசு.
8 முறை அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக 1990 ஜனவரி முதல் 1996 அக்டோபர் வரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதுவே ஜம்முவில் முதன்முறையாக முதல்வர் இல்லாமல் நீண்டகாலம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட தருணம். அதற்கு காரணம் ஜக்மோகன் மல்ஹோத்ரா மீண்டும் மாநில ஆளுநராக பதவியேற்றதை அடுத்து, பரூக் அப்துல்லா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் வன்முறை வெடித்தது.
ஜக்மோகன் ஆறு மாதங்களுக்குள் திரும்ப அழைக்கப்பட்டாலும், தீவிரவாதம் மாநிலத்தை வெகுவாகப் பாதித்ததால், ஜனாதிபதி ஆட்சி 6 ஆண்டுகள் எட்டு மாதங்கள் தொடர்ந்தது. புதிய அரசு அமைப்பதற்காக 1996 அக்டோபரில் புதிய சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதே வரிசையில் ஜம்முவில் 2018 ஜூன் 20ல் இருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு மேல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் இல்லை. பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் 2018 நவம்பர் 21ம் தேதி ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையை முடக்கி உத்தரவிட்டார். அப்போதைய கவர்னர் சத்யபால் மாலிக். அதோடு விடவில்லை மோடி.
2019 மக்களவை தேர்தல் முடிந்து 2ம் முறையாக பிரதமர் பதவியை ஏற்றதும் அவரது பார்வை ஜம்மு காஷ்மீர் பக்கம் தான் சென்றது. ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்தார். அதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது. அக்டோபர் 31ம் தேதி ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை முற்றிலும் கலைக்கப்பட்டது. அதன்பிறகு எத்தனையோ போராட்டங்கள் மக்களால், அரசியல் கட்சி தலைவர்களால் நடத்தப்பட்டும், மோடியின் செவிக்கு அவர்களது குரல் எட்டவில்லை.
தன்னாட்சி அமைப்பு என்று கூறப்படும் தேர்தல் ஆணையமும் ஜம்முவில் தேர்தல் நடத்த ஆலோசனை கூட மேற்கொள்ளவில்லை. மோடியின் உத்தரவுக்காக காத்திருந்தது. இந்த இடைவேளையில் ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டன. தொகுதி எண்ணிக்கை 119 ஆக்கப்பட்டது. 90 தொகுதிகள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் மூலமும், 24 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும், 5 உறுப்பினர்கள் நியமனம் மூலமும் தேர்வு செய்ய அனைத்து சட்டவிதிகளும் மாற்றி அமைக்கப்பட்டன.
ஆனாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதிர்ந்து போன அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஒன்றிய அரசுக்கு எதிரான இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து, வரும் 30ம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு, அதாவது 10 ஆண்டுகள் கழித்து ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து அங்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அங்கு முழுமையாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜனநாயகம் மலர வேண்டும். இதுவே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.