சென்னை: ஆசிரியர்கள் ஒரு கல்வி ஆண்டின் பாதியில் பணி ஓய்வு பெற்றால், ஆண்டு இறுதிவரை மறு பணியமர்த்தும் விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஓய்வு பெற்றதும் பணியில் இருந்து ஆசிரியர்கள் ஓய்வு பெற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி ஓய்வுபெறும் வயது வரும் போது, ஒரு கல்விஆண்டின் பாதியில் (மே 31ம் தேதி) ஓய்வுபெறும் நிலை ஏற்படும் போது, அந்த ஆசிரியர்கள் அந்த கல்வி ஆண்டின் இறுதி வரையில் மறு பணியமர்த்தும் விதி இதுவரை இருந்தது. இந்த விதியில் 2024-25ம் ஆண்டுக்கு மீண்டும் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அதை ஏற்க இயலாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: ஆசிரியர்களுக்கு ஓய்வுபெற்று மறு நியமனம் வழங்கும் போது கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை மறு நியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதை திருத்தம் செய்து கல்வி ஆண்டின் இறுதிநாள் (மே 31ம் தேதி) வரை மறு நியமனம் வழங்க அனுமதி அளித்து அரசாணை வழங்க அரசிடம் கோரப்பட்டு இருந்தது. இக்கோரிக்கையை ஏற்க இயலாது என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த விவரம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.