பெங்களூரு: ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, ஜூன் 4ம் தேதி சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, பணியில் அலட்சியம் காட்டியதற்காக மாநகர காவல் ஆணையர் தயானந்த் உட்பட சில காவல் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆர்சிபி அணி நிர்வாகத்தின் சார்பில் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் வெற்றிப் பேரணி நடத்துவதாக மாநகர காவல் ஆணையரிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.
வெற்றிப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய கால அவகாசம் வேண்டும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அதையும் மீறி ஆர்சிபி நிர்வாகம் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் ஜூன் 4ம் தேதியே விழாவை நடத்த முயன்றதால் தான் இந்த அசம்பாவிதம் நடந்ததாக போலீசார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் மற்றும் வருவாய்ப் பிரிவு தலைவர் நிகில் சோசலோ, வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் மேத்யூ, கிரன் குமார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பை தப்பி செல்ல முயன்ற போது பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
* நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
தங்கள் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ரகுராம் பட் மற்றும் மற்ற சில நிர்வாகிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அசோக் ஹரனஹள்ளி மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோரும், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரன் ஷெட்டியும் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ண குமார், கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து வழக்கின் விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.