சென்னை: ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளின்படி, தங்க நகையை அடமானம் வைப்பவர்கள் அதற்கான உரிமையாளர் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானம் வைக்க முடியும் போன்ற 9 விதிமுறைகளை வெளியிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துவரும் நிலையில் நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: உலகிலேயே அதிகப்படியான தங்கத்தை நுகரும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியர்கள் தங்கத்தை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும், சொத்துகள் வாங்குவதற்கும், மருத்துவம், விவசாயம், கல்வி போன்ற இதர அத்தியாவசிய செலவுகளுக்கும் அடமானம் வைத்து வருகின்றனர்.
தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புதிய விதிகளால் மக்கள் சுலபமாக தங்கள் நகையை அடமானம் வைக்கும் சூழல் பறிபோகிறது. ஒரு பக்கம் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு எகிறிக்கொண்டே போகிறது, மறுபக்கம் தங்கம் அடமானம் வைத்து பெறப்படும் தொகையை 75 சதவீதமாக குறைத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். இதனால் அதிக பணம் தேவைப்படும் மக்கள் தனியார் நிதி நிறுவங்களையோ அல்லது கந்து வட்டி தருபவர்களையோ நாட வேண்டிய சூழல் உருவாகும். எனவே இந்த புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.