தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் சென்னை 2.0 திட்டத்தில், ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தெலுங்கு ஆரம்ப பள்ளி கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், ராயபுரம் மண்டலம், 52வது வார்டுக்கு உட்பட்ட ஆஞ்சநேயா நகர், பழைய ஆடுதொட்டி தெருவில் ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தெலுங்கு ஆரம்ப பள்ளி கட்டிடத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி, பள்ளியில் நடந்த விழாவில், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்வில், மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், மாமன்ற உறுப்பினர் கீதா சுரேஷ், மண்டல அதிகாரி தமிழ்ச் செல்வன், பகுதி செயற்பொறியாளர் லோகேஸ்வரன், வட்ட செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.