*சீரமைக்க வலியுறுத்தல்
ராயக்கோட்டை : ராயக்கோட்டை அருகே குண்டும், குழியுமாக உள்ள காடுசின்னகானம்பட்டி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராயக்கோட்டையிலிருந்து பழையூர் வழியாக காடுசின்னகானம்பட்டி, கூத்தாண்டஅள்ளி மற்றும் நம்மாண்டஅள்ளி வழியாக பஞ்சப்பள்ளிக்கு செல்ல தார்சாலை அமைத்து பல வருடங்களான நிலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
அந்த சாலை ராயக்கோட்டையிலிருந்து போகும்போது கினியன்பள்ளம் அருகே கடும் மேடாகவும், காடு சின்னகானம்பட்டியிலிருந்து ராயக்கோட்டை நோக்கி வரும்போது கிடு,கிடு பள்ளமாக உள்ளது. இந்த சாலையை கிராம மக்கள் மட்டுமின்றி பெரும்பாலும் விவசாயிகளே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை வழியாக ராயக்கோட்டையில் உள்ள மண்டிகளுக்கு தங்களது விளை பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்வதை விவசாயிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அப்போது, குண்டும்- குழியுமான சாலையில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரிவான பகுதியில் வாகனங்களில் வரும்போது திடீரென பிரேக் செயலிழப்பதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே, தினசரி 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.