சென்னை: அந்தரத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக சுற்றுலா பயணிகள் தொங்கிய சம்பவத்தை தொடர்ந்து ஈஞ்சம்பாக்கம் பொழுதுபோக்கு மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் விஜிபி பொழுதுபோக்கு மையம் உள்ளது. இம்மையத்தில் ‘டாப் கன் ரைட்’ என்ற ராட்சத ராட்டினம் பிரபலமானது. செங்குத்தாக மேலே சென்று, கீழே இறங்கும் இந்த ராட்டினத்தில் 30 பேர் வரை அமரலாம்.
நேற்று முன்தினம் 8 சிறுவர்கள், 10 பெண்கள் உள்பட 30 பேர் இந்த ராட்டினத்தில் ஏறினர். ராட்டினம் சுற்றிக்கொண்டிருக்கும் போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, ராட்டினம் சுழலாமல் அப்படியே நின்றது. 120 உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் 30 பேரும் சிக்கிக்கொண்டனர். பயத்தில் அவர்கள் அலறினர். கீழே இதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களும் கூச்சலிட்டனர். பொழுதுபோக்கு மைய ஊழியர்கள் ஓடிவந்து ராட்சத ராட்டினத்தின கோளாறை சரி செய்ய முயன்றனர். முடியவில்லை.
இதன்பின் போலீசுக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடனே வந்தனர். 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயணைப்புத் துறையின் ராட்சத ஏணி மூலம் 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விஜிபி பொழுதுபோக்கு மையத்தில் உள்ள ராட்சத ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு இயந்திரங்களின் நிலை குறித்து உரிய அறிக்கை அளிக்கும்படி நீலாங்கரை போலீசார் நேற்று காலை நோட்டீஸ் வழங்கினர்.
அனைத்து இயந்திரங்களின் நிலை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா என்பதை வருவாய்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். இதனால், விஜிபி பொழுதுபோக்கு மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே, விஜிபி பொழுதுபோக்கு மைய பொதுமேலாளர் பாலா உள்ளிட்ட 5 பேர் ஆவணங்களுடன், நீலாங்கரை காவல் நிலையத்தில் ஆஜராகினர். அந்த ஆவணங்களை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்னரே பொழுதுபோக்கு மையம் திறக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.