வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சியில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், வாலாஜாபாத் வட்ட வழங்கல் அலுவலர் சுகுணா தலைமை தாங்கினார். முகாமில், நத்தாநல்லூர் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைக்கான பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் திருத்தம், முகவரி மாற்றுதல் மற்றும் செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவை குறித்து மனுக்கள் வழங்கினர்.
இதில், 24 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு விரைவில் தீர்வு காணப்படும் என முகாம் அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் விஸ்வநாதன், கிராம நிர்வாக அலுவலர் சசிகலா, வட்ட வழங்கல் இளநிலை உதவியாளர் சுந்தர் உட்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.