சென்னை: அனைத்து நியாய விலை கடைகளிலும் நாளை மறுதினம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலை கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 31ம் தேதி (சனி) அனைத்து நியாய விலை கடைகளிலும் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.