பல்லாவரம்: எலியை பிடிக்கச்சென்று கிணற்றில் தவறி விழுந்த பூனையை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜர் சாலை அம்பேத்கர் சிலை அருகே பொது கிணறு உள்ளது. நேற்று முன்தினம் இந்த கிணற்றின் சுற்றுச்சுவர் மீது சென்ற எலியை பார்த்த பூனை, அதனை பிடிக்க விரட்டிச்சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றினுள் பூனை தவறி விழுந்தது.
தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு, உயிருக்கு போராடிய பூனை கூச்சலிட்டபடி இருந்தது. சத்தம் கேட்டு, கிணற்றில் எட்டிப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பூனையை உயிருடன் மீட்டனர். பூனை தானே என்று அலட்சியமாக இல்லாமல், கருணையுடன் பூனையை மீட்ட தீயணைப்பு வீரர்களை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.