ராசிபுரம்: ராசிபுரம் அருகே அண்ணாமலை நடைபயணத்தில் கலந்து கொண்ட பெண்ணிடம் பாஜவைச் சேர்ந்தவர் சில்மிஷம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில், நடைபயணம் நேற்று முன்தினம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்தது. பட்டணம் சாலையில் அண்ணாமலை நடந்து சென்ற போது, பாஜவினர் கூட்டமாக நின்றிருந்தனர். அப்போது, பாஜவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், அண்ணாமலையை பார்க்க ஆர்வத்துடன் கூட்டத்திற்குள் நுழைந்தார். அங்கு நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க கட்சிக்காரர் ஒருவர், அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், திரும்பி அந்த நபரை தாக்க முயன்றார். உடனே அந்த நபர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது, சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் தப்பியோடி விட்டதால், இந்த பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என பாஜவைச் சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அப்பெண்ணும் போலீசில் புகார் தெரிவிக்காமல், அங்கிருந்து சென்று விட்டார். அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பெண்ணிடம், அக்கட்சியைச் சேர்ந்தவரே சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.