ஒவ்வொரு பண்டிகையும் இனிப்புடன்தான் தொடங்குகிறது. பொங்கலைத் தித்திக்க வைக்கும் கரும்பு, ரமலானைத் தித்திக்க வைக்கும் குனாஃபா, கிறிஸ்துமஸைக் கொண்டாட கேக் என வகை வகையான இனிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. இதில் தீபாவளிதான் ரொம்ப விசேஷம். தீபாவளி என்றால் எப்படி பட்டாசு ஞாபகம் வருமோ, அதேபோல இனிப்புகளின் ஞாபகமும் வரும். காலம் காலமாக அதிரசம், லட்டு, ஜாங்கிரி என இனிப்புகளோடுதான் கழிகிறது தீபாவளி. இப்போது மைசூர் பாகு, பாதுஷா என விரிவடைந்திருக்கிறது. இந்த இனிப்புகளைப்போல ரசகுல்லாவும் தீபாவளியின் அடையாளமாகி இருக்கிறது. ரசகுல்லா அனைவரும் விரும்பும் எளிமையான இனிப்பு என்றே கூறலாம். இதனால் இனிப்புப் பிரியர்களின் பட்டியலில் ரசகுல்லாவுக்கு முக்கிய இடம் உண்டு. வெண்ணிறப் பஞ்சு போன்ற வடிவத்தில் சர்க்கரைப் பாகில் ஊற வைத்து தயார் செய்யப்படும் ரசகுல்லா சுமார் 100 ஆண்டு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இதன் சுவையெல்லாம் சரிதான்.
வரலாறுதான் கொஞ்சம் சிக்கலாகி இருக்கிறது. தமிழகத்தின் திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம் என பல உணவுகள் புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது அல்லவா! அதுபோல் ரசகுல்லாவுக்கும் புவிசார் குறியீடு பெற, அதற்கு பெயர்போன 2 மாநிலங்கள் உரிமை கோரி இருக்கின்றன. அங்குதான் தொடங்கி இருக்கிறது சிக்கல். புவிசார் குறியீடு பெறும் பொருட்களை அதே பெயரில் வேறு இடங்களில் பிரபலப்படுத்த முடியாது. இங்குதான் மாட்டிக்கொண்டது ரசகுல்லா. ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வருக்கும் கட்டாக் நகருக்கும் இடையே உள்ள பஹாலா எனும் கிராமத்தில்தான் தொடக்க காலத்தில் ரசகுல்லா தயாரிக்கப்பட்டது என ஒடிசா அரசு ஒப்பித்தது. இதற்காக பல்வேறு ஆதாரங்களையும் அடுக்கியது. பூரி ஜெகன்னாதர் கோயிலின் தேர்த்திருவிழாவின் இறுதியில் கடவுளுக்கு நைவேத்ய பண்டமாக ரசகுல்லாதான் படைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரசகுல்லா நைவேத்தியம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதாகவும் ஒடிசா அரசு கூறியது.
இது ஒருபுறம் இருக்க ரசகுல்லா என்றால் அது பெங்காளி ஸ்வீட்தான் என்று எடுத்த எடுப்பிலேயே உரிமை கொண்டாடியது கொல்கத்தா. 1866ம் ஆண்டு வடக்கு கொல்கத்தாவில் பாக்பஜார் என்னுமிடத்தில் நோபின் சந்திரதாஸ் என்பவர் முதன்முதலில் ரசகுல்லாவை தயாரித்து விற்பனை செய்துள்ளதாக வரலாற்று ஆதாரம் காட்டி இருக்கிறார்கள் வங்காளிகள். கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கே.சி தாஸ் இனிப்பகத்தில் தயாராகும் ஆரஞ்சு, மாம்பழ ரசகுல்லா மற்றும் வெல்லத்தில் தயாராகும் ரசகுல்லா இனிப்பு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஹிட் ஆகியிருக்கிறது. ஒடிசா ரசகுல்லா வேறு, எங்கள் ரசகுல்லா வேறு. எங்களுடைய ரசகுல்லாதான் ஒரிஜினல். எனவே எங்களுக்குத்தான் ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீட்டை வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தியது மேற்கு வங்கம். இறுதியில் நிபுணர் குழுவையெல்லாம் அமர்த்தி ரசகுல்லாவின் ஓனர் மேற்கு வங்கம்தான் என பஞ்சாயத்து முடித்து வைக்கப்பட்டது. ரசகுல்லா போச்சே என ரத்தக்கண்ணீர் வடித்தது ஒடிசா. புவிசார் குறியீடு விசயத்தில் ஒடிசாவுக்கு கசப்பைத் தந்தாலும் உலகத்தாரின் நாவுகளுக்கு இன்றும், என்றும் இனிப்பையேத் தந்துகொண்டிருக்கிறது ரசகுல்லா. இன்னும் 10 நாட்களில் தீபாவளி வருகிறது. இந்த பஞ்சாயத்து பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் வீட்டிலேயே செய்து ருசிப்போம் ரசகுல்லாவை.
ரசகுல்லா
தேவையான பொருட்கள்
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 3/4 கப்
தண்ணீர் – 3/4 கப்
ஐஸ் கட்டிகள்- 4
பிஸ்தா – 3
லெமன் ஜூஸ் – 1 1/2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும், பால் கொதிக்கும் தருவாயில், சிறிது லெமன் ஜுஸ் சேர்க்க வேண்டும். இப்போது பால் திரிவதைப் பார்க்க முடியும். திரியும் பாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு, ஐஸ் கட்டிகளை பாலில் சேர்க்க வேண்டும். ஐஸ் கட்டிகள் உருகிய பின், மஸ்லின் துணியில் பாலை ஊற்றி நீர் இல்லாமல் வடிகட்ட வேண்டும். இப்போது மஸ்லின் துணியில் இருக்கும் பாலை லெமன் வாசனை போகும் வரை ஓடும் நீரில் நன்றாக அலச வேண்டும். பின் துணியை தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து அரை மணி நேரம் தனியாக வைத்திருக்க வேண்டும். அதன் பின் துணியில் இருக்கும் திரிந்த பாலை 1 ப்ளேட்டில் எடுத்துக்கொண்டு பிசைய வேண்டும். பிறகு பிசைந்த (மாவு போல் உள்ள) பாலை சிறிய உருண்டைகளாக பிடித்து தனியே வைத்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து பாகு செய்துகொள்ள வேண்டும். சர்க்கரைப் பாகில் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு, தீயை சிம்மில் வைத்து 3 நிமிடம் வேக விட்டு, பின் தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். அதன்பிறகு அடுப்பை ஆஃப் செய்து விட்டு, பாத்திரத்தில் இருக்கும் உருண்டைகளை ஆற வைத்துவிட்டு, மேற்பரப்பில் பிஸ்தாவை
தூவினால் சுவையான ரசகுல்லா தயார்.