Wednesday, June 18, 2025
Home ஆன்மிகம்அபூர்வ தகவல்கள் முருகப் பெருமானின் அபூர்வ ஆலயத் தகவல்கள்

முருகப் பெருமானின் அபூர்வ ஆலயத் தகவல்கள்

by Nithya

*விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை அருகில் உள்ள துலுக்கன் குறிச்சி எனும் ஊரில் முருகப் பெருமான் வாழைமர முருகன் என்ற வித்தியாசமான பெயரில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள வாழைமர பாலசுப்ரமணியர் ஆலயத்தில் முருகப் பெருமான் வாழை மரத்துடன் அருள்பாலிக்கிறார். 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இந்த கோயிலின் தலவிருட்சமும் வாழை மரம்தான். இங்கே வைகாசி விசாகம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பால் குடம் எடுத்து முருகப் பெருமானை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். திருமணம் மற்றும் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

பெரம்பலூரில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது செட்டிகுளம் இங்குள்ள மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது தண்டாயுதபாணி திருக்கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான், வேலுக்குப் பதிலாக கையில் செங்கரும்பை ஏந்திய படி காட்சி தருகிறார். இந்த சிறப்பு வேறு எந்த முருகன் கோயிலிலும் இல்லாதது.

கடம்பவனத்தில் தவம் இருந்த முனிவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அசுரர்களை முருகப் பெருமான் தன் வேலால் வீழ்த்தி வெற்றி கொண்டார். அதனால் இவ்வூரில் உள்ள காமாட்சியம்மன் செங்கரும்பை வழங்கி முருகப் பெருமானை வாழ்த்தினார். அதன் நினைவாக இந்த கோலத்தில் இங்குள்ளதாக ஐதீகம். இங்கு வைகாசி விசாகம் அன்று சங்கு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

*நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் வேளிமலைச் சாரலில் அமைந்துள்ளது குமாரகோவில். இதன் புராணப்பெயர் வேள்வி மலை என்பதாகும். இங்குள்ள மூலவர் குமாரசாமி 10 அடி உயரத்தில் நீண்ட காதுகளுடன் காட்சி தருவது அபூர்வமானது. முருகப் பெருமான் – வள்ளியம்மனுக்கு திருமணம் நடந்தபோது, அதற்காக வேள்வி நடைபெற்ற மலை இது என்று கூறப்படுகிறது. இந்தக் குமாரக் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் கஞ்சி பிரசாதம் வழங்கப்படுகிறது. இதனை வாங்கிக் குடித்தால் நோய்கள் அகலும் என்பது நம்பிக்கை. இந்த கஞ்சி பிரசாதம் வெள்ளிக் கிழமை மட்டுமே வழங்கப்படும்.

தலவிருட்சமான வேங்கை மரத்திற்கு என தனி சந்நதி அமைந்துள்ள தலம் இதுவாகும். இந்த ஆலயத்தில் வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதில் 6-ம் நாள் விழா அன்று வள்ளிக்குச் சொந்தமான சொத்துக் களின் விவரங்கள் ஆலய ஊழியர்களால் வாசிக்கப்படுகின்றன.

*முருகப் பெருமானின் நாலாவது படைவீடு கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை. இங்கு முருகன் சுவாமி நாதன் எனும் பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு மலை கிடையாது. ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுமலையில் 60 அடி உயரத்தில் சுவாமிநாத சுவாமிக்கு சந்நதி அமைந்துள்ளது. இவரைத் தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு தமிழ் வருடங்களே கோயிலின் படிக்கட்டுகளாக அமைந்துள்ளது.

தமிழ் வருடங்கள் பிரபவ முதல் அட்சய வரை 60 வருட தேவதைகளும் படிக்கட்டுகளாக அமைந்துள்ளது. இந்த 60 படிக்கட்டுக்களுக்கும் தமிழ் வருடப்பிறப்பு மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு தினங்களில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. சுவாமிமலையில் வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில், முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்த நிகழ்வு நினைவுகூரப்படுகிறது.

*திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருமங்கலம் எனும் ஊர். இங்குள்ள சாம வேதீஸ்வரர் கோயில் சண்டிகேஸ்வரர் தனது சாபம் தீரப்பெற்ற இடம் என்பதால், சுவாமி சந்நதியின் இருபுறமும் விநாயகரும், சண்டிகேஸ்வரரும் காட்சியளிக்கிறார்கள். இதை வேறு எங்கும் காணமுடியாது. அதேபோல், இக்கோயில் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் ஒரு சிறிய கோயிலில் முருகப் பெருமான் கல்யாண சுப்ரமணியன் என்ற பெயரில் நின்ற கோலத்தில் தனது துணைவியாரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க, வள்ளி மட்டும் தனியாக மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இது வேறு எந்த கோயிலிலும் இல்லாதது.

*கரூர் மாவட்டத்தில் வெங்கமேடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வெண்ணெய் மலை. இந்த மலையின் மீது முருகப் பெருமான் கோயில்கொண்டு அருள்பாலிக் கிறார். தனது மனைவியரான வள்ளி – தெய்வானை சமேதராக வீற்றிருக்கும் முருகப் பெருமான், வேல் இல்லாமல் காட்சி தருகிறார். இது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். திருமணத் தடை உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த ஆலயத்திற்கு வந்து வேலவனைத் தரிசித்தால், திருமணத் தடை அகலும் என்பது நம்பிக்கை.

*முருகன் கோயிலில் முருகப் பெருமானை ஆறு கரங்களில், 12 கரங்களில் அருள்பாலிக்க பார்த்திருப்பீர்கள். 11 தலை, 22 கரங்களுடன் கூடிய முருகனை பார்த்து இருக்கிறீர்களா? அப்படிப்பட்ட முருகப் பெருமான் ராமநாதபுரம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் அருள்பாலிக்கிறார். மற்ற கோயிலில் பிரணவமந்திரத்தின் பொருள் கேட்கும் முருகன் சிவனின் மடியில் உட்கார்ந்து இருப்பது போன்ற சிலைகள் இருக்கும். ஆனால், இங்கு முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவமந்திரத்தின் பொருள் சொல்ல அதை சிவன் நின்று கொண்டு கேட்கும் நிலையில் சிலை உள்ளது.

*புதுக்கோட்டை – காரையூர் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமரமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில். கொள்ளையழகுடன் காட்சி தரும் முருகப் பெருமானின் இக்கோயிலில் குழந்தைப் பாக்கியத்திற்காக, வாத நோய் நீங்குவதற்காக, கணவன் மனைவி ஒற்றுமைக்காக என எல்லாவற்றுக்கும் விசேஷமாக பிரார்த்தனை செய்து வழிபடுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வளைகாப்பு தினத்தன்று இங்கே வந்து இங்கேயுள்ள வேலுக்கு வளையல்களை அணிவித்து சுகப்பிரசவத்திற்காக பிரார்த்தனை செய்வது இந்தத் தலத்தின் குறிப்பிடத்தக்க
சிறப்பாகும்.

*சேலம் உடையார் பட்டிக்கு அருகில் உள்ளது கந்தாஸ்ரமம். இங்கு முருகப் பெருமானுக்கு தண்டாயுதபாணி தோற்றம். எதிரில் அம்பிகை 18 கரங்களுடன் கருணையே வடிவாக முருகனைப் பார்த்தவண்ணம் இருக்கிறார். இவர் சக்தி வடிவம், கந்தன் ஞான வடிவம் எனவே விசேஷ நாட்களில் முருகனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்கிறார்கள்.
வலப்புறம் ஆணாகவும், இடப்புறம் பெண்ணாகவும் முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

*திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அமைந்துள்ளது செஞ்சேரிமலை மந்திரகிரி ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் மூலவராக வேலாயுதசுவாமியும், உற்சவராக முத்துகுமாரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் 12 கைகளுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.

இக்கோயிலில் “பூக் கேட்டல்’’ என்ற பழக்கம் ஒன்று உள்ளது. பக்தர்கள் முருகனின் 12 கைகளில் வலது ஒன்றும் இடது ஒன்றுமாக ஏதாவது இரண்டு கைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் பூவை வைக்கின்றனர். ஐந்து நிமிடத்தில் வலது கரத்தில் உள்ள மலர் கீழே விழுந்தால் நினைத்தது நடக்கும். தாமதமாக பூ விழுந்தால் காரியம் மிக தாமதமாக நடக்கும். இடது புறத்தில் உள்ள பூ விழுந்தால் நினைத்த காரியம் நடக்காது என்று அறிந்து கொள்கின்றனர்.

*சேலம் – கள்ளக்குறிச்சி சாலையில் 54 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுக் கோட்டை. இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ளது வட சென்னிமலை பாலசுப்பிரமணியர் கோயில். இங்கே முருகப் பெருமான் குழந்தை வடிவில் மேற்கு நோக்கிய படி சிரித்த கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் குடும்ப நிலையிலும், தண்டாயுதபாணி துறவறக் கோலத்திலும் காட்சி தருகின்றனர். ஒரே முருகன் தலத்தில் மூன்று கோலங்களிலும் முருகப் பெருமான் காட்சி தரும் ஆபூர்வத்தை இங்கு காணலாம்.

*நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் பாடல்கள் மூலமாகவே பிரபலமடைந்தது. இத்தலம் காவடி எடுக்கும் திருவிழாவிற்கு மிகவும் பெயர்போனதாகும்.

இங்குள்ள முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து காட்சி தருகிறார். இந்த மூவரும் அமர்ந்திருக்கும் மயிலுக்குத் தரையிலிருந்து ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. பெரும்பாலான கோயில்களில் முருகன் அமர்ந்திருக்கும் மயிலானது வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால், எட்டுக்குடியில் மட்டும் மயில் இடது பக்கம் திரும்பி யிருக்கும்.

தொகுப்பு: கோவீ.ராஜேந்திரன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi