*அழிவின் விளிம்பில் இருந்து மருந்து செடிகளை காப்பாற்ற கோரிக்கை
நாகர்கோவில் : மருந்துவாழ்மலையில் சித்தா மூலிகை பண்ணை அமைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு முனையில் வானுயர அமைந்து இருக்கிறது மருந்துவாழ்மலை. மேற்கு தொடர்ச்சி மலையின் கடைசி பகுதி இது தான். குமரி மாவட்டத்தில் பொற்றையடியில் தான் இந்த புனித தன்மை நிறைந்த மருந்துவாழ்மலை இருக்கிறது.
இதை மருத்துவமலை என்றும் அழைக்கிறார்கள். இந்த மலையில் பல நோய்களைக் குணப்படுத்த 1000க்கும் மேற்பட்ட மருத்துவ மூலிகைகள் உள்ளன. பல்லுயிர் பெருக்க மையமான இங்கு நூற்றுக்கணக்கான தனித்துவமான தாவரங்கள் உள்ளன. ராமாயணத்தில் லட்சுமணனின் காயங்களை குணப்படுத்த அனுமன் சுமந்து சென்றதாக கூறப்படும் சஞ்சீவி மலையின் ஒரு பகுதியாகவே மருந்துவாழ்மலை கருதப்படுகிறது.
அகஸ்திய முனிவர், நாராயண குரு உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக குருக்கள், ரிஷிகள் ஆகியோர் மலையின் மேல் உள்ள குகையில் தியானம் செய்திருக்கிறார்கள். நிலத்திலிருந்து 800 அடி உயரத்தில் உள்ள உச்சியில் ஹனுமான், அய்யா வைகுண்டர், சிவன் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளன.
இந்த மலையை தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை இணைந்து பிரபலப்படுத்தி பல்வேறு சுற்றுலா திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக மருத்துவ மூலிகைகள் உள்ளதால் மிகப்பெரிய அளவில் மூலிகை பண்ணை அமைத்து மலையை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் வனத்துறையினருக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா மேம்பாட்டு அமைப்பினர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
மருத்துவாழ் மலையில் அதிக அளவில் சீமை கருவேல மரம் உள்ளது. தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பாக இந்த மலையில் உள்ள அனைத்து சீமை கருவேல மரங்களையும் வேரோடு பிடுங்கி அதன் சுவடு தெரியாமல் முழுமையாக அகற்ற வேண்டும்.
இந்த மலையில் நாட்டு ரக மரங்கள் ( மாமரம், பலாமரம், வேங்கை, புங்கு உள்ளிட்ட பல்வேறு வகை ெகாண்ட) நட்டு பராமரிக்க வேண்டும். மருந்துவாழ் மலையில் தமிழ் மருத்துவம் சித்த மருத்துவத்திற்கு தேவையான அனைத்து மருந்து செடிகளை நட்டு பாதுகாக்க வேண்டும்.
இந்த பணியை தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில், சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சித்தா மருத்துவர்கள் என ஒரு அனைவரும் இணைந்து இதற்கு என்று ஒரு குழு அமைத்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.
பொள்ளாச்சி அருகில் ஆழியாறில் வனத்துறை சார்பில், வன மரபியல் ஆராய்ச்சி மையம், மூலிகை பண்ணை கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு, வனப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகளின் நாற்றுகள் பராமரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதைப்போல் வனத்துறை சார்பாக இந்த மருந்துவாழ் மலையில் அழிந்து போன சித்தர்கள் பயன்படுத்திய மூலிகைகளை கண்டறிந்து சித்தா மூலிகை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூலிகை பண்ணை அமைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா உடன் கூடிய சிறிய அலுவலகம் அமைத்து வனத்துறை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோடை காலங்களில் அதிக வெயில் காரணமாக மருந்து செடிகள் வறண்டு மாண்டு வருகிறது. எனவே அவற்றை பாதுகாக்கும் பொருட்டு பம்பு செட் அமைத்து மலையின் மேல் தண்ணீர் கொண்டு சென்று தினசரி மாலை நேரத்தில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக மலையேறும் பட்டியலில் இந்த மலையையும் சேர்க்க வேண்டும். ஆன்மிக பக்தர்கள் வசதிக்காக தற்போது இந்த மலையில் பாழடைந்து கிடக்கும் கோயில்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருந்துவாழ் மலையின் மேலே ஏறுவதற்கு தற்போது உள்ள பாதை மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் மேலே போக முடியாத படி உள்ளது. எனவே தற்போது உள்ள சிறிய பாதையை சீரமைத்து கான்கிரீட் ஒற்றையடி பாதை அமைக்க வேண்டும் என்றனர்.
பிளாஸ்டிக் தடை செய்யப்பட வேண்டும்
மலை அடிவாரத்தில் பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டு பொருட்கள், மலையை சுற்றி சுற்று பாதையில் சைக்கிள் பாதை, நடை பயிற்சிக்கு என்று நடைபாதை போன்றவைகள் அமைக்க வேண்டும் மருந்துவாழ்மலை பாதுகாப்பு சங்கம் சார்பிலும் இந்த மலையை பராமரிக்க பல்வேறு கோரிக்கைகள் வைத்து உள்ளனர்.
இங்கு மலையேற்றம் செய்யும் நபர்கள் வசதிக்காக மலையில் மேலே செல்லும் இடத்தில் குழாய் பதித்து ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் மலையின் மேல் கொண்டு செல்வது தடுக்கப்படும். இதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
மலை உச்சியில் இயற்கையை ரசிக்கலாம்
இந்த மலை உச்சியில் இருந்து கன்னியாகுமரியின் முழு அழகையும் அனுபவிக்க முடியும். இந்த மலை உள்ளூர் மலையேற்றக்காரர்களால் விரும்பப்படும் ஒரு பிரபலமான மலையேற்றப் பாதையாகும். இது மிதமான சவாலான பாதை. மலை சிகரத்தை அடைய சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும். மலையின் உச்சியில் இருந்து, வரைபடங்களில் நாம் காணும் இந்தியாவின் ‘வி-வடிவ’ விளிம்பை காணலாம்.
மலையின் உச்சியில் 360° காட்சியை மூன்று பக்கங்களிலும் கடல் மற்றும் நான்காவது பக்கத்தில் வலிமைமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தொடக்கத்துடன் வழங்குகிறது.
எப்போது மலையேற்றம் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து, சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தையும் காணலாம். மலைக்குச் செல்லும் வழியில், அகத்திய முனிவர், சிவன் பார்வதி மற்றும் ஹனுமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு குகைக் கோயில்களைக் காணலாம்.