ஒன்றியத்தில் அதிகாரம் செலுத்தும் பாஜ அமைச்சர்களின் ேபச்சுக்கள் உருவாக்கும் சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் புதிய சர்ச்சையை கொளுத்திப்போட்டிருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் பல மாநிலங்களில் இந்தியை திணிக்க முயன்றது ஒன்றிய அரசு. இப்படி இந்தியை திணிக்க முயன்றவர்கள், தற்போது ஆங்கிலத்தை அழிப்போம் என்பதை புதிய சூளூரையாக எடுத்திருப்பது தான் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
சமீபத்தில் தலைநகர் டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘நமது நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள். இது போன்ற சமூகம் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நமது கலாசாரத்தின் அணிகலன்களாக நமது மொழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். அந்நிய மொழிகளால் இந்திய கலாசாரம் மற்றும் வரலாற்றின் சாரத்தை கைப்பற்ற முடியாது.
நமது நாட்டையும், கலாசாரத்தையும், வரலாற்றையும், மதத்தையும் புரிந்து கொள்ள எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. முழுமையடைந்த இந்தியா என்ற கொள்கையை, அரைகுறையான அந்நிய மொழி மூலம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த போர் என்பது எவ்வளவு கடினமானது என்பது எனக்கு தெரியும். ஆனால், இதில் இந்திய சமூகம் வெற்றி பெறும். மீண்டும் ஒருமுறை சுயமரியாதையுடன், நமது சொந்த மொழிகளில் நமது நாட்டை நடத்துவோம். உலகையும் வழிநடத்துவோம். சித்தாந்தம் செய்வோம். ஆராய்ச்சியில் ஈடுபடுவோம் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. 2047ல்இந்தியா, சர்வதேச அளவில் முதன்மையாக இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும்,’’ என்று தெரிவித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் உலகமயமாக்கல் என்பது அசுர வேகத்தில் நடந்து வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம், சர்வதேச போக்குவரத்து, கணினி மொழிகள், நாடுகளுக்கிடையான ஒப்பந்தங்கள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றில் இன்றியமையாத மொழியாக ஆங்கிலம் மாறிவிட்டது. மேலும் ஆங்கிலமே தற்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரேயொரு முக்கிய வணிக மொழியாகவும் திகழ்கிறது.
இது மட்டுமன்றி வேற்று மொழிகளில் உருவான தலைசிறந்த படைப்புகள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உலகளாவிய கவனம் ஈர்த்துள்ளது. தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் இன்று உலகப்பொதுமறையாக உயர்ந்து நிற்பது இதற்கான பெரும் சான்று.
இந்த வகையில் ஆங்கிலம் என்பது அனைத்துமொழி சார்ந்த மக்களும் உலகின் கதவுகளை திறப்பதற்கு கிடைத்த ஒரு அரிய சாவி. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்கள் பற்றிய புரிதல் நமக்கு ஏற்படும். அதே ேநரத்தில் நமது கலாச்சாரம், பண்பாடு அவர்களுக்கும் தெளிவாக உணர்த்தப்படும். எனவே “ஆங்கிலம் என்பது அணை அல்ல, பாலம். ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல, அதிகாரம். ஆங்கிலம் என்பது கை விலங்கல்ல, விலங்குகளை உடைக்கும் கருவி. இன்றைய உலகில், ஆங்கிலம் உங்கள் தாய்மொழியைப் போலவே முக்கியமானது. ஏனெனில் அது வேலைவாய்ப்பை வழங்கும், உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உண்டு. நாம் அவற்றைப் போற்ற வேண்டும்,’’ என்று தலைவர்களும், மொழியியல் ஆய்வாளர்களும் ெதரிவித்திருப்பது நிதர்சனமான உண்மை.