பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜி(26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் சாமுவேல் என்பவர் பழக்கமானார். கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். விஜியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் சாமுவேல் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜி 3 மாத கர்ப்பமானார். எனவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சாமுவேலிடம் கூறியுள்ளார். ஆனால் சாமுவேல் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். விஜி அந்த மாத்திரைகளை சாப்பிட்டு வயிற்று வலியால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மதர் தெரேசா நகர் பகுதியை சேர்ந்த மியூசிக் வாத்தியார் சாமுவேல் (26) என்பவரை கைது செய்தனர். மேலும் சாமுவேல் மீது வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.