பெரம்பூர்: ஓட்டேரியில் ரேபிடோ புக் செய்து கஞ்சா கைமாற்றிய நபர் கைது செய்யப்பட்டார்.சென்னை ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் நேற்று மாலை ஓட்டேரி மேட்டுப்பாளையம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் 2 பேர் வந்தனர். அவர்களை மடக்கி சோதனை செய்தனர்.
பின்னால் அமர்ந்திருந்த நபரின் கைப்பையை சோதனை செய்தபோது சுமார் அரை கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், கொளத்தூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்த மணி (26) என்பவர் தனியார் ஆன்லைன் செயலியில் ரேபிடோ மூலம் இருசக்கர வாகனத்தை புக் செய்து வந்ததுள்ளார். ரேபிடோ வண்டியை ஓட்டிய நபருக்கு இதில் சம்பந்தம் இல்லை.
இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினார். மணியிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் சிறைக்குச் சென்று 2 மாதத்திற்கு முன்பு வெளியே வந்ததும், சிறையில் அறிமுகமான வெங்கடேசன் என்பவரிடம் கஞ்சா பொருட்களை வாங்கி அதனை வெளிநபர்களுக்கு விற்று பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.