திருவனந்தபுரம்: நடிகர்கள் மீது நாளுக்கு நாள் பலாத்கார புகார்கள் குவிந்ததைத் தொடர்ந்து மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமா கமிட்டி என்ற புயல் கடைசியில் மலையாள நடிகர்கள் சங்கத்தையும் சாய்த்து விட்டது. இந்த கமிட்டி அறிக்கையில் நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் மட்டும் தான் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்றும், இல்லாவிட்டால் வாய்ப்பு பறிபோவது மட்டுமல்லாமல் பல அச்சுறுத்தல்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியான பின்னர் பல நடிகைகள் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் குறித்து வெளிப்படையாக கூறியது பல நட்சத்திரங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் சித்திக், இணை செயலாளர் பாபுராஜ் மற்றும் நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ், ஜெயசூர்யா, மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, டைரக்டர்கள் ரஞ்சித், துளசிதாஸ், வி.கே. பிரகாஷ் மற்றும் பலர் மீது நடிகைகள் கீதா விஜயன், மினு முனீர், ரேவதி சம்பத், லேகா மித்ரா உள்பட நடிகைகள் பாலியல் புகார் கூறினர்.
நடிகர்கள் மற்றும் டைரக்டர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் குவிந்ததால் மலையாள சினிமாத் துறை கடும் நெருக்கடிக்கு ஆளானது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்னர் மூன்று நாட்கள் வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த மலையாள நடிகர்கள் சங்கம் அதன் பின்னர்தான் வேறு வழியின்றி மவுனத்தை கலைத்தது. ஹேமா கமிட்டி அறிக்கையில் வெளியான தகவல்கள் தனிப்பட்ட சம்பவம் தான் என்று இதன் பொதுச் செயலாளர் சித்திக் கூறினார். இந்நிலையில், மலையாள நடிகர்கள் சங்க தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
முன்னதாக மோகன்லால் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஆன்லைன் மூலம் ஒரு அவசர கூட்டத்தை நடத்தினர். இக்கூட்டத்தில் தான் அனைவரும் பதவியை ராஜினாமா செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக மோகன்லால் நடிகர் மம்மூட்டியுடன் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்தார். இதன்பின் தான் மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியானது. தலைவர் மோகன்லால் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்புதான் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கூடி தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் தலைவராக மோகன்லால் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாக ஜெகதீஷ், ஜெயன் சேர்த்தலா, இணை செயலாளராக பாபுராஜ், பொருளாளராக உண்ணி முகுந்தன் மற்றும் டொவினோ தாமஸ், அன்சிபா ஹசன், ஜோமோள், அனன்யா, சரயு உட்பட 17 நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். 2 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூத்த நடிகர்கள் மற்றும் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு நடிகர்கள் சங்கம் சார்பில் மாதந்தோறும் ஓய்வூதியம் மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்காலிகமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவிடம் நடிகைகள் வாக்குமூலம்
டைரக்டர் ரஞ்சித் மீதான புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது இபிகோ 354 பிரிவின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கைது நடவடிக்கையை தவிர்க்க டைரக்டர் ரஞ்சித் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளார். இதற்கிடையே பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள 4 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பல நடிகைகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்று வருகின்றனர். டைரக்டர் ரஞ்சித் மீதான புகார் குறித்து எஸ்பி பூங்குழலி நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.