திருவனந்தபுரம்: நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் பலாத்கார புகார்கள் குவிவதால் மலையாள நடிகர்கள் சங்கம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதையடுத்து நாளை அவசர செயற்குழு கூட்டத்தை கூட்ட நடிகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவதாக சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து வெளிப்படையாக கூறத் தொடங்கி உள்ளனர்.
மேற்குவங்க நடிகையான லேகா மித்ரா, மம்மூட்டி நடித்த பாலேரி மாணிக்கம் என்ற படத்தில் நடிக்க வந்தபோது அதன் டைரக்டரும், கேரள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் தன்னிடம் அத்துமீறியதாக கூறினார். இதேபோல ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகரும் மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளருமான சித்திக் தன்னை அறையில் பூட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக கூறினார். மேலும் தமிழ் நடிகர் ரியாஸ் கானும் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார். பிரபல நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டெஸ்சா என்ற நடிகையும், நடிகர் சுதீஷ் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஜூபிதா என்ற நடிகையும் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே பாலியல் புகார்களைத் தொடர்ந்து கேரள சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித்தும், மலையாள நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சித்திக்கும் நேற்று ராஜினாமா செய்தனர். இந்தநிலையில் நடிகர்கள் மீது அடுத்தடுத்து குவியும் பாலியல் பலாத்கார புகார்கள் மலையாள நடிகர் சங்கத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக மலையாள நடிகர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் நாளை கொச்சியில் நடைபெறுகிறது. இதில் தலைவர் மோகன்லால், தற்காலிக பொதுச் செயலாளர் பாபுராஜ், துணைத் தலைவர்கள் ஜெயன் சேர்த்தலா, ஜெகதீஷ், நடிகைகள் அன்சிபா ஹசன், அனன்யா, ஜோமோள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் புகார்களால் மலையாள நடிகர் சங்கத்தில் மோதல் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் தலைவர் சித்திக் கூறிய சில கருத்துக்களுக்கு எதிராக துணைத் தலைவர்கள் ஜெயன் சேர்த்தலா, ஜெகதீஷ் ஆகியோர் பேசியது நடிகர் சங்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் புகார்கள் தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்தால் மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு மேலும் சிக்கல் ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.