லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தை சேர்ந்த 40 வயது பெண், ராஜ்குமார் என்பவரின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். சிறிதுநேரம் கழித்து அவரது 20 வயது மகள் தாயை தேடி ராஜ்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஒரு அறையில் தாயின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அந்த இளம் பெண் அங்கு சென்று கதவை திறந்து பார்த்துள்ளார். அங்கு தாய் 3 தூண்டுகளாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் அங்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சம்பவத்தன்று பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ராஜ்குமார், அவரது சகோதரர் பவுவா சுக்லா, ராமகிருஷ்ண சுக்லா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதால் தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்’ என்றார். இச்சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.