லக்னோ: உத்தரகாண்ட் மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ஒருவர் கடந்த மாதம் 30ம் தேதி திடீரென மாயமானார். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் திப்திபா கிராமத்தில் இருந்து கடந்த 8ம் தேதி ெசவிலியரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் இளம்பெண், உத்தரபிரதேச மாநில எல்லையில் உள்ள பிலாஸ்பூர் காஷிபூர் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அவர் வசிக்கும் பகுதியில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் சம்பவம் நடந்து 9 நாட்களுக்கு பின்னர் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அந்த பெண்ணுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த மாதம் 30ம் தேதி மாலை, வேலை முடிந்து, இ-ரிக்ஷாவில் பயணித்துள்ளார். அதன் பின்னர் அவர் மாயமானார். அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த தர்மேந்திரா என்பவரை, ராஜஸ்தானில் கைது செய்தோம். இவர் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்ற செவிலியரை பின்தொடர்ந்து சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரை இழுத்து சென்றார். பின்னர் சித்ரவதை செய்து, சால்வையால் கழுத்தை நெரித்து கொன்றார். போதையில் இருந்த அவர், அந்த பெண்ணின் செல்போனையும், பணப்பையில் இருந்த 3,000 ரூபாயையும் கொள்ளையடித்து சென்றார்.
பாலியல் பலாத்கார முயற்சிகள் நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர். சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர் பலாத்கார கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு மத்தியில் செவிலியர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.