நாக்பூர்: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி டிராவில் முடிந்தது. இதனால், முதல் இன்னிங்சில் அதிக ரன் குவித்த விதர்பா அணி, 2024-2025 ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி நாக்பூரில் கடந்த பிப். 26 முதல் நடந்து வந்தது. முதலில் களமிறங்கிய விதர்பா அணி 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் கேரளா முதல் இன்னிங்சில் 342 ரன் எடுத்தது. அதைத் தொடர்ந்து 4ம் நாள் ஆட்டத்தின்போது விதர்பா அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் கடைசி நாளான நேற்று விதர்பா அணியின் 2வது இன்னிங்சை தொடர்ந்த கருண் நாயர் 135 ரன்னில் அவுட்டானார். அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். தர்ஷன் நல்கண்டே 51, யாஷ் தாக்கூர் 8 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். 143.5 ஓவர் முடிவில் விதர்பா அணி 9 விக்கெட் இழப்புக்கு 375 ரன் எடுத்திருந்தது. அப்போது விதர்பா 412 ரன் முன்னிலை பெற்றிருந்தது. அதனால் கேரளா 2வது இன்னிங்சை ஆடுவதற்கு போதிய நேரம் இருக்காது என்பதால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், முதல் இன்னிங்சில் விதர்பா அணி 37 ரன்கள் அதிகம் பெற்றிருந்ததால் அதன் அடிப்படையில் அந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விதர்பா அணியின் டேனிஸ் மலேவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஞ்சி தொடரில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியும் கணிசமாக ரன்கள் குவித்தும் அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விதர்பா அணியின் ஹர்ஷ்தூபே தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.