அகமதாபாத்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரயில்வே-தமிழ்நாடு அணிகள் மோதும் லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடக்கிறது. முதலில் ஆடிய ரயில்வே 229ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு விக்கெட் இழப்பின்றி 19ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த ஷாருக்கான் 11, கேப்டன் நாரயண் ஜெகதீசன் 8ரன்னுடன் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர்.
அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கிய ஷாருக்கான் 86ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முதல் விக்கெட்டுக்கு ஷாருக்-ஜெகதீசன் இணை 137ரன் சேர்த்தது. அடுத்து வந்த முன்னாள் கேப்டன் விஜய் சங்கர் 11 ரன்னில் வெளியேறினார். அரைசதம் விளாசிய ஜெகதீசன் 56ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 38 ரன் எடுத்தார். வழக்கம் போல் அதிரடியாகவும், பொறுப்புடனும் விளையாடிய ஆந்த்ரே சித்தார்த் 78ரன் விளாசினார். சோனு யாதவ் 4ரன்னுடன் திருப்தி அடைந்தார்.
அதனால் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு 6 விக் கெட் இழப்புக்கு 324 ரன் குவித்துள்ளது. எனவே 95 ரன் முன்னிலைப் பெற்றுள்ள தமிழ்நாடு 3வது நாளான இன்றும் முதல் இன்னிங்சை தொடர உள்ளது. முகமது அலி 37, அஜித்ராம் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ரயில்வே தரப்பில் சிவம் சவுத்ரி, குணால் யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
ஷமி மீண்டும் சாகசம்
காயம் காரணமாக ஓய்வில் இருந்த வேகம் முகமது ஷமி ஒராண்டுக்கு பிறகு பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறார். முதல் இன்னிங்சில் பெங்கால் 228 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மத்திய பிரதேசம் நேற்று 167ரன்னுக்கு சுருண்டது. பெங்கால் தரப்பில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட் அள்ளி இந்த சீசனை வெற்றிக் கரமாக தொடங்கி உள்ளார்.