ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து காரை கூட்ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம், சிப்காட், பெல், நரசிங்கபுரம், லாலாப்பேட்டை, திருவலம், பொன்னை போன்ற ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கிறது. மேலும் சித்தூர் செல்வதற்கும் இவ்வழியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் காரை கூட்ரோடு பேருந்து நிறுத்தம் உள்ளது. பல்வேறு ஊர்களுக்கு செல்ல இங்கு பயணிகள், பொதுமக்கள் பேருந்து வரும் வரை காத்திருந்து பேருந்து வந்தவுடன் செல்வார்கள்.
காரை கூட்டோட்டில் மேம்பாலம் பணிகள் நடப்பதால் தற்காலிக நிழற்குடை ஓலை கொட்டகையில் அமைத்து இருந்தனர். தற்போது அந்த ஓலை கொட்டகை சரிந்துள்ளது. இதனால் பேருந்து வரும் வரை முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள், பயணிகள் என பலர் வெயிலில் நின்று சிரமப்படுகின்றனர். எனவே காரை கூட்ரோட்டில் தற்காலிக நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.