*கலெக்டர் பங்கேற்பு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற இயக்கம் சார்பாக ஒருநாள் கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சி தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.
இதில் பசுமை அலுவலக நடைமுறைகளை நிறுவனமயமாக்குதல், காலநிலைக் கல்வியை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத் துறைகள் முழுவதும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை இந்தப் பட்டறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதை வலியுறுத்தியும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப் பைகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அலுவலர்களுக்கு மஞ்சப்பைகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக, பசுமை உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் அன்றாட நிர்வாக செயல்பாடுகளை நீண்டகால காலநிலை தாக்கத்துடன் இணைக்கும் வகையில் உரையாற்றினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா மரம் வளர்த்தல் மட்டுமின்றி அவற்றை பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும், மாவட்ட வன பாதுகாவலர் மணிவண்ணன், பசுமை அலுவலகங்கள் எவ்வாறு காலநிலை மாற்ற இலக்குகளுக்கு நேரடியாக பங்களிக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் தனியார் பவுண்டேசன் காளிதாஸ் கருத்துரையில், பொது அலுவலகங்களின் பசுமை நடைமுறைகள் மற்றும் குறைந்த விலை உத்திகளை வழங்கினார்.
இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்நிலை பாதுகாவலர் விருது பெற்ற தயாளன், கிரீன் சாம்பியன் விருது பெற்ற முனுசாமி, ஆற்காடு தொழிற்கல்வி ஆசிரியர் கிருபானந்தம் மற்றும் மாவட்ட சுத்திகரிப்பு நிலைய பொது மேலாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.