ராணிப்பேட்டை : தூய்மை பணியாளர் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என ராணிப்பேட்டையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தேசிய நல ஆணைய தலைவர் உத்தரவிட்டார். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள், நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் சந்திரகலா முன்னிலை வகித்தார். இதில் தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசியதாவது:
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்கிறதா? சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா?, பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு பணி செய்கிறார்களா? என்பதை ஆய்வு செய்து அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும்.
இ.எஸ்.ஐ, பி.எப்., மற்றும் இன்சூரன்ஸ் பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர்களின் கணக்கில் தவறாமல் வழங்கப்படுகிறதா என்பதை தொழிலாளர்களிடம் கேட்டறியவேண்டும்.
அரசின் ஆணைப்படி துய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அரசு நலத்திட்டங்களும் கிடைக்கச்செய்வதே தேசிய தூய்மைப்பணியாளர் நல ஆணையத்தின் நோக்கம்.
எனவே தூய்மைப்பணியாளர்கள் தங்களுக்கான பிரச்னைகளை தெரிவிக்கலாம் என்றார்.
தொடர்ந்து தூய்மைப்பணியாளர்களை அழைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் வாரியாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிலர் குறைகள் தெரிவித்தனர். அவற்றை 2 வாரங்களுக்குள் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அதேபோல் அரசு பொது விடுமுறை நாட்களில் வேலை செய்தால் அதற்கான 2 நாள் ஊதியத்தையும் வழங்கும் நடைமுறையை உறுதி செய்யவும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கட்டாயம் குரூப் இன்சூரன்ஸ் எடுப்பதையும் கண்காணிக்கும்படி கலெக்டரை கேட்டுக்கொண்டார்.
மேலும் குறைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை தனிப்பட்ட முறையில் தெரிவிக்க ஆணைய அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து இறந்த தூய்மைப்பணியாளர் குடும்பத்தாரிடம் ஈமச்சடங்கு நிதியுதவி தலா ரூ.25 ஆயிரம் என 2 குடும்பத்திற்கும், தூய்மைப்பணியாளர் நலவாரிய அட்டை 10 பயனாளிகளுக்கும், 2 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளையும் அவர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் எஸ்.பி. விவேகானந்தசுக்லா, டி.ஆர்.ஓ. சுரேஷ், திட்ட இயக்குனர் ஜெயசுதா, மண்டல இயக்குனர் நகராட்சி நிர்வாகம் லட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடையநம்பி, தாட்கோ மேலாளர் அமுதராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலவலர்கள், துறைச்சார்ந்த அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.