*திட்ட இயக்குனர் தகவல்
அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடிசை வீடுகள் இல்லாத நிலையை ஏற்படுத்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3,333 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள பிடிஓ அலுவலகத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ஜெயசுதா நேற்று திடீரென வந்தார். பின்னர் அவர்,அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்ள வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் கேட்டறிநந்தார்.
மேலும், அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். காலதாமதமின்றி பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்து கண்டறிந்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் ஜெரால்டு, பிடிஓ பாஸ்கரன், பொறியாளர்கள் தியாகராஜன், மனோஜ், பிரபு சங்கர், மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, தணிகைப்போளூர், வேடல், பெருமாள்ராஜப்பேட்டை, மின்னல், பாராஞ்சி ஆகிய கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பணிகள், தொகுப்பு வீடு கட்டுதல், அங்கன்வாடி மையம் அமைத்தல், சிமெண்ட் சாலை போடுதல், கழிவுநீர் கால்வாய் ஏற்படுத்துதல், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் மருத்துவமனை கட்டிடம் கட்டுதல் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து திட்ட இயக்குனர் ஜெயசுதா கூறுகையில், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடிசை வீடுகள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக, தலா ₹3.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது.மாவட்ட முழுவதும் 3,333 வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது மாவட்ட முழுவதும் தற்போது சுமார் 80 சதவீதத்திற்கு மேல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு கான்கிரீட் வீடு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும், 20 சதவீத பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடிசை வீடு இல்லாத நிலையை நாம் அடைய முடியும்’ என கூறினார்.