சென்னை : பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை சிப்காட்டில் 1975ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு 1989ம் ஆண்டில் மூடப்பட்டது. மூடப்பட்ட ஆலையில் 2.50 லட்சம் டன் குரோமியம் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அது அகற்றப்படாததால், அது வேதிவினை புரிந்து நீரிலும், நிலத்திலும் கலந்து வருகிறது.
700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் எதற்கும் பயன்படாத மலட்டுத் தன்மை கொண்டவையாக மாறிவிட்டன. மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரிலும் குரோமியக் கழிவுகள் கலந்திருப்பது தான் என்று கூறப்படுகிறது.
பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் குரோமியக் கழிவுகள் பரவுவதைத் தடுக்க இடைக்காலத் தீர்வுத் திட்டம் ஒன்றை செயல்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முன்வந்திருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டியது தான் என்றாலும் கூட, இது போதுமானதல்ல. இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல், குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.