இதற்கு முந்தைய நாமமான, மந்த்ரிண்யம்பா விரசித விஷங்கவத தோஷிதா… என்கிற நாமத்தில் பண்டாசுரனானவன் தன்னுடைய இரண்டு புஜங்களிலிருந்து இரண்டு அசுரர்களை உற்பத்தி செய்தான். ஒருவனுடைய பெயர் விஷங்கன், இன்னொருவன் பெயர் விசுக்ரன். இதில் விஷங்கன் என்பவன் அவனுக்கு மந்திரி ஸ்தானத்தில் இருந்தான். அவனை அம்பாளுடைய மந்திரியாக இருக்கக் கூடிய ராஜ மாதங்கி சம்ஹாரம் செய்தாள். இதுதான் இதற்கு முந்தைய நாமாவினுடைய விஷயம். இப்போது அந்த விஷங்கனுடைய இன்னொரு சகோதரனாக இருக்கக்கூடிய, இன்னொரு புஜத்திலிருந்து உண்டான விசுக்ரன் என்பவன் அந்த பண்டாசுரனுக்கு சேனாதிபதி ஸ்தானத்தில் இருக்கிறான். அந்த சேனாதிபதி ஸ்தானத்தில் இருக்கிறவனை பண்டாசுரன் போருக்கு அனுப்புகிறான். அவனோடு போரிடுவதற்கு அவனை வதம் செய்வதற்கு அம்பாள் யாரை அனுப்புகிறாள் எனில், தன்னுடைய சேனாதிபதியாக இருக்கக்கூடிய மஹாவாராஹியை அனுப்புகிறாள்.
தண்டநாதாவை அனுப்புகிறாள். வாராஹி சொரூபத்தில் அம்பிகை அங்கு போரிடப் போகிறாள். எப்படி விஷங்கனை வதம் செய்வதற்கு மாதங்கி சொரூபத்தில் வந்தாளோ, விசுக்ரனை வதம் செய்வதற்கு வாராஹி சொரூபத்தில் வருகிறாள். ஏனெனில், பண்டாசுரன் தன்னுடைய சேனாதிபதியை அனுப்பினால், அம்பிகையும் தன்னுடைய சேனாதிபதியை அனுப்புவாள். பண்டாசுரன் தன்னுடைய புத்திரர்களை அனுப்பினால், அம்பிகை தன்னுடைய புத்திரியான பாலாவை அனுப்புவாள். பண்டனுடைய மந்திரி வந்தால் அம்பிகை தன்னுடைய மந்திரிணீயை அனுப்புவாள். இப்போது பண்டனுடைய சேனாதிபதி வருகிறான் எனில் அம்பிகை தன்னுடைய சேனாதிபதியை அனுப்புகிறாள். தன்னுடைய சேனாதிபதி யாரெனில், அதுவே வாராஹி. அம்பிகையானவள் வாராஹி சொரூபத்தில் சென்று, பண்டாசுரனுடைய சேனாதிபதியாக இருக்கக்கூடிய, விசுக்ரனை சம்ஹாரம் செய்கிறாள். அதை எப்படிச் செய்கிறாள் எனில், விசுக்ர பிராண ஹரண… வாராஹி வீர்ய நந்திதா… விசுக்ரனுடைய பிராணனை ஹரணம் செய்கிறாள். அதாவது விசுக்ரனுடைய பிராணனைப் போக்குகிறாள்.
அப்படி போக்குகின்ற அந்த பராக்கிரமத்தைப் பார்த்து, அம்பிகையான லலிதை மிகவும் சந்தோஷப்படுகிறாள். நந்திதா… அதாவது ஆனந்தப்படுகிறாள் என்று பொருள். அப்போது விசுக்ரனுடைய பிராணனை போக்கிய வீர்யத்தைப் பார்த்து லலிதா மஹாதிரிபுரசுந்தரியானவள் ஆனந்தப்படுகிறாள். இதுதான் இந்த நாமாவினுடைய வெளிப்படையான அர்த்தம். முந்தைய நாமமான விஷங்க வத தோஷிதா… என்பதை கொஞ்சம் இங்கு நினைவு கூர வேண்டும். இந்த தேகம், மனசு போன்றவற்றோடு இந்த ஜென்மா உண்டாகும்போது, இந்த மனம்தான் இவை எல்லாவற்றுக்கும் காரண கர்த்தாவாக இருக்கின்றது. இந்த மனசுக்கு ஒரு பற்று தேவைப்படும். இந்த மனசுக்கு ஒரு பிடிப்பு தேவைப்படும். இந்த மனசினுடைய பிடிப்புதான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பற்றாகி, அது attachment என்கிற பிடிப்பாகி, அந்த attachment தான் ஜனன மரணத்தினுடைய சூழலில் சென்று சிக்க வைக்கும் அளவிற்கு கர்மாவாக மாறுகின்றது. அது மீண்டும் கர்ம வாசனையாகி மீண்டும், பிறப்பு இறப்பிற்குள் சென்று சிக்கிக்கொள்கிறது என்று பார்த்தோம். அந்த பற்றை அறுப்பதுதான் மாதங்கியினுடைய விஷயம் என்று பார்த்தோம்.
ஆனால் இந்தப் பற்றானது உலகை நோக்கி போகக்கூடிய negative sense attachment ஆக இல்லாமல், சத்சங்கம் என்கிற positive sense attachment ஆக இருக்க வேண்டும். வெளிமுகமாகச் செல்லாமல் உள்முகமாகப் போனால், அதே பற்று நம்மை அத்யாத்யமமாக முன்னேற்றிக் கொண்டு போகும். அந்தப் பற்றானது வெளிமுகப் போனால் பிறப்பு இறப்பு என்கிற சம்சாரச் சுழற்சியில் கொண்டுபோய் விடும். இப்போது இந்த நாமத்தின் இன்னொரு கோணத்தைப் பார்க்கலாம். சென்ற நாமத்தில் மனசு, பற்று என்பதெல்லாம் மிகவும் சூட்சுமமானது. மனதை நாம் யாராவது கண்ணால் பார்த்திருக்கிறோமா? கிடையாது. பற்று என்கிற attachment இருக்கிறதே அதைக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், உணர முடிகின்றது. நாம் வெறுமனே பேசுதல் என்பது மட்டும் சத்சங்கம் அல்ல. நல்லதொரு கூடுதல். நல்லதொரு attachment எங்கு இருக்கிறதோ அதுவும் சத்சங்கம்தான். அதுவே negative ஆக இருக்கக்கூடியது துர்சங்கம் அதையும் கண்களால் காண முடியாது.
இப்போது மனசு, பற்று போன்ற சூட்சுமமான விஷயங்களையெல்லாம் ராஜமாதங்கி, மஹா ஷியாமளா பார்த்துக் கொள்வாள். இப்படியாக மாதங்கியானவள் மிகவும் மென்மையான, நுட்பமான விஷய வாசனைகளை பார்த்துக் கொள்வாள். அதேபோன்று வாராஹியினுடைய விஷயம் இதற்கு முன்னால் பார்த்திருக்கிறோம். மஹா பத்மாடவி சம்ஸ்தா… என்றெல்லாம் பார்த்திருக்கிறோம். வாராஹியினுடைய விஷயம் ஸ்தூலமாக இருக்கும். ஏனெனில், வெளிப்படையான விஷயத்தை வாராஹி ஏன் பார்த்துக் கொள்கிறாளெனில், நமக்கு வெளியே தெரிவது கொஞ்சம்தான். ஆனால், உள்ளே வேர்விட்டு உள்ளே போயிருக்கும். அப்படி வேரோடு போயிருக்கக் கூடிய அந்த கிழங்கு இருக்கிறதல்லவா… அந்தக் கிழங்கை பிடுங்கக் கூடியது வராஹம். அப்படி வெளியே தெரியக் கூடிய வேர் எவ்வளவு தூரம் போயிருக்கிறதோ அதை அவ்வளவு மென்மையாக செய்ய முடியாது. மாதங்கி எப்படி மென்மையாக செய்கிறாளோ, அதுபோல வாராஹியானவள் அடி வேருக்குப் போய் பிடுங்கி எடுப்பதை மென்மையாகச் செய்ய மாட்டாள்.
நாமே ஒரு பூமியிலிருந்து ஒரு கிழங்கை எடுக்க வேண்டுமானால், மெதுவாக எடுப்பா என்று சொல்ல முடியாது. பூ பறிப்பதை மென்மையாகப் பறிக்கலாம். பூஜைக்கு புஷ்பத்தை சேகரிக்கிறோம் எனில், அதை மென்மையாகத்தான் பறிக்கிறோம். அதை பிடுங்க முடியாது. அதே கிழங்கை மென்மையாக எடுக்க முடியாது. கிழங்கைத் தோண்டி பிடுங்கித்தான் எடுக்க வேண்டும். அப்போது மென்மையாக செய்வது அனைத்தையும் ராஜ மாதங்கி, மகா ஷியாமளா செய்கிறாள் எனில், கொஞ்சம் force full ஆக செய்யக் கூடியதை வாராஹியான தண்டநாதா செய்வாள். இந்த நாமாவே பிராண ஹரண என்று வரும். இதற்கு முந்தையா நாமத்தில் வதம் செய்தலைக் கூட விஷங்க வத தோஷிதா… என்றெல்லாம் இருக்கும். ஆனால், இங்கோ விசுக்ர பிராண ஹரண… என்பதில் எவ்வளவு force தெரிகிறது பாருங்கள். எனவே, சில விஷயங்களை force ஆகச் செய்ய வேண்டும். சில விஷயங்களை மென்மையாகச் செய்ய வேண்டும். இப்போது சூட்சுமமான பாகத்தை பார்த்து விட்டோம்.
ஸ்தூலமாக இருக்கக் கூடியது இருக்கிறது. இந்த சாதகனுக்கு தேகத்திலேயும், பிராணன்லேயும், அன்னமய கோசத்திலேயும் வரக்கூடிய இடையூறுகள் இருக்கிறதல்லவா… ஏனெனில், நாம் தேகத்தை நன்றாகப் பார்க்கிறோம். தேகம் ஸ்தூலமான விஷயம். இந்த தேகம் இருப்பதனால்தானே நம்மை நாமே உணரவே முடிகின்றது. இந்த தேகத்தின் மூலமாக வரக்கூடிய இடையூறுகள். அதே மாதிரி இந்த தேகத்தை இயக்கக்கூடியது யாரெனில் பிராணன். அந்தப் பிராணன் மூலமாக வரக்கூடிய இடையூறுகள். இதனுடைய மொத்த சொரூபம்தான் விசுக்ரன். ஒரு சாதகன் ஆனவன் அத்யாத்யமமாக முன்னேறும்போது, தேக ரீதியாகவும் பிராண ரீதியாகவும் சில இடையூறுகள் வரும். அப்படி வரக்கூடிய அந்த இடையூறுகளை அம்பாள் வாராஹியை அனுப்பி அந்த இடையூறுகளை சம்ஹாரம் செய்வாள். இதற்கு முன்னால் மனதினால் வரும் பற்றுக்கள்தான் என்று பார்த்தோம். கர்ம வாசனைகள்தான் இடையூறு என்று பார்த்தோம். அந்த கர்ம வாசனைகள்தான் இடையூறு என்று பார்த்தால், அவை சிலசமயம் ஸ்தூலமாகவும் செயல்படும்.
சூட்சுமமாகவும் செயல்படும். அப்படி ஸ்தூலமாக செயல்படும்போது, நம்முடைய தேகத்திற்கு இடையூறுகள் வருகின்றன. இந்த தேகத்திற்கு வரக்கூடிய இடையூறுகள் என்ன? இந்த தேகத்திற்கு வரக்கூடிய நோய் நொடியாகட்டும். ஏற்கனவே செய்த கர்மாவினால் இந்த தேகத்திற்கு வரக்கூடிய கஷ்டங்களாகட்டும், தேகத்திற்கு வரக்கூடிய இந்த புத்துணர்ச்சி இல்லாததாக இருக்கட்டும். சோம்பலாக இருக்கட்டும், தேகத்தினால் நாம் படும் அவஸ்தைகளாக இருக்கட்டும்.. என்று எல்லாமே இடையூறுகள். இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவெனில், இந்த இடையூறுகள் அனைத்துமே பிராணனை பாதிக்கும். பிராணனில் ஏதாவது மாற்றம் இருந்தால்தான், அது தேகத்தில் காண்பித்துக் கொடுக்கும். அதனால்தான் நாம், யோகத்தில் பிராணாயாமத்தை வைக்கிறோம். பிராணன் சீராக இருந்தால்தான் தேகத்தை சீராக்க முடியும். இந்தப் பிராணன் மூலமாக, இந்த தேகம் மூலமாக இந்த சாதகனுக்கு என்னென்ன இடையூறுகள் வருகின்றதோ அந்த இடையூறுகளையெல்லாம் அம்பாள் வாராஹி ரூபத்தில் வந்து அதையெல்லாம் சம்ஹாரம் செய்கிறாள்.
பிராணனிலிருந்து வரக்கூடிய இடையூறு என்பது, internal ஆக வருகின்ற இடையூறு. நோய் நொடியாகட்டும் எல்லாமே பிராணனில் வருகின்ற மாற்றத்தினால் வருகின்றது. External ஆக மற்றவர்களுடையவிஷயத்திலிருந்து வருமல்லவா… அடுத்தவர்களுடைய தாக்கம் இருக்குமல்லவா… நாம் எதுவுமே செய்யவில்லையென்றாலும் நம்மைத் தவறாக நினைக்கலாம். சிலருடைய திருஷ்டி நம்மீது வேலை செய்யலாம். மற்றவர்கள் நம்மீது ஒரு அவதூறு சொல்லலாம். நாம் ஒருவருக்கு எந்தக் கெடுதலும் செய்திருக்க மாட்டோம். ஆனால், அவன் நம்மை எதிரியாக நினைத்துக் கொண்டிருப்பான். Internal ஆக ஒரு list போடுவதுபோல, external ஆகவும் list போடலாம். இப்படி external ஆக வரக்கூடிய இடையூறுகளையும் வாராஹிதான் தகர்க்கிறாள்.
ஏன், எதிரிகளுடைய தொல்லையை நீக்குவதற்கு வாராஹியை சொல்கிறார்களெனில் அதற்கு இதுதான் காரணம். நமக்கு internal ஆக வரக்கூடிய எதிரிகளையும், external ஆக வரக்கூடிய எதிரிகளையும் நீக்கக் கூடியவளே வாராஹி.ஆனால், இதை மென்மையாகச் செய்ய முடியாது. Force full ஆக செய்ய வேண்டும். அப்படிச் செய்வதற்கு வாராஹியினுடைய விஷயம் இங்கு தேவைப்படுகின்றது. வாராஹியினுடைய சொரூபத்தில் வந்து அந்த சாதகனை காப்பாற்றுகிறாள். எப்படி காப்பாற்றுகிறாள் எனில், ஸ்தூலமாக வரக்கூடிய negativities விருத்திகள் இருக்கிறதல்லவா…. அது வெளியிலிருந்து வரக்கூடியதாக இருக்கலாம். அல்லது உள்ளுக்குள்ளிருந்து வரக்கூடியதாகவும் இருக்கலாம். (சுழலும்)
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா