இந்த பூமி, சூரியன் , நிலா, சூரியக் குடும்பம், அண்டம் எல்லாமே அதிசயங்கள் நிறைந்ததுதான். அவை எல்லாம் எப்படி உருவானது எப்படி உருமாறியது என்று பல ஆராய்ச்சிகள் இன்றும் நடந்துகொண்டேதானிருக்கிறது. இந்நிலையில் விண்கற்கள் பூமியில் விழுந்து ஒரு சில புதுப் புவியியல் அமைப்புகள் உருவாகி அதைப் பற்றிய ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டுள்ளன. விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்றுமண்டலத்தின் ஊடாக, அதிவேகத்தில் வந்தடையும்போது, வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்போது இவை எரிகல் அல்லது எரிநட்சத்திரம் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளிமண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, மிகப் பெரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.அப்படி உருவான ஒரு பெரிய பள்ளத்தைப் பற்றித் தான் இன்று உங்களுக்குச் சொல்ல இருக்கிறோம். இந்தியாவில் ஒரு இடம் மட்டும் இப்படி உருவாகவில்லை. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா என்று மூன்று இடங்களில் விண்கற்கள் விழுந்து புவியியல் அமைப்புகள் உருவாகியுள்ளன.
சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானின் பாரான் மாவட்டத்தின் மங்ரோல் தெஹ்சில் ராம்கர் கிராமத்திற்கு அருகில் விந்தியமலைத் தொடரில் பூமியின் மேற்பரப்பில் ஒரு விண்கல் விழுந்து நிரந்தர அடையாளத்தை உருவாக்கியுள்ளது . இன்று, அந்தஇடம் ராம்கர் பள்ளம் அல்லது ராம்கர் ஆஸ்ட்ரோபிள்ம்(Astrobleme) அல்லது ராம்கர் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. விண்கல்லின் தாக்கத்தால் உருவான புவியியல் அம்சத்தை விவரிக்க astrobleme என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ராம்கர் ஆஸ்ட்ரோபிளம் அல்லது பள்ளம் ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தில் ராம்கர் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இது ஏறக்குறைய 3.5 கிமீ விட்டம் கொண்ட இந்தப் பள்ளம், மிகவும் பழமையானது. 1869 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர் காலத்தில் இந்திய புவியியல் ஆய்வின் (GSI) புவியியலாளர் ஃபிரடெரிக் ரிச்சர்ட் மாலெட் என்பவரால் பள்ளம் முதன்முதலில் பார்வையிடப்பட்டது . ராய் பகதூர் கிஷன் சிங் ராவத் (1850-1921), ஒரு காலனித்துவ கால இந்திய ஆய்வாளர் மற்றும் வரைபடவியலாளர் இதை முதலில் சிறிய அளவில் வரைபடமாக்கினார். இதைத்தொடர்ந்து பல ஆராய்ச்சியாளர்கள் இன்றுவரை ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அசல் அமைப்பை அடையாளம் காண்பது சற்று சவாலாக உள்ளது.