குமரி: ராமேஸ்வரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி ராமேஸ்வரம் தீவு பகுதிகளான திட்டக்குடி, வேர்கோடு, புதுரோடு, தெற்கு வாசல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.
3ம் பிரகாரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலை உருவானது. கன்னியாகுமரி மாவட்டம் குமரிமுனை, தென் தாமரை குளம், சின்னமுட்டம், கோட்டாரம், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதேபோல் திங்கள்சந்தை, குளச்சல், திருவட்டாறு, குலசேகரம், மாத்தூர் சுற்றுவட்டாரங்களில் மீண்டும் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.