ராமேஸ்வரம்: இலங்கை சிறைபிடித்த 27 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று, மீன்பிடிக்க இன்று கடலுக்குச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14ம் தேதி 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 4 படகுகளுடன், 23 மீனவர்களை சிறைபிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
இதுபோல் நாகை மாவட்டம், ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் தீவுப் பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகையும், அதிலிருந்த 4 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அன்று இரவோடு இரவாக அழைத்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட 27 மீனவர்களும், ஊர்க்காவல்துறை நீதிபதி, இலங்கை நீதிமன்ற நீதிபதி ஆகியோர் உத்தரவுப்படி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட படகுகள், 27 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி நடந்து வந்தது.
இதனால், விசைப்படகுகள் அனைத்தும் கரைநிறுத்தம் செய்யப்பட்டன. இந்த நிலையில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து 5 நாட்களுக்கு பிறகு, ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்வளத்துறை டோக்கன் பெற்று, 100க்கும் மேற்பட்ட சிறிய படகுகளுடன் கடலுக்குச் சென்றனர். பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நவராத்திரி திருவிழா முடிந்த பின் அனைத்து படகுகளும் கடலுக்கு செல்லும் என மீனவர்கள் தெரிவித்தனர்.