ராமேஸ்வரம்: ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று 5 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சிறையில் உள்ள 64 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள், 5 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் 200 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இரவு மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை வழிமறித்து மீன் பிடிப்பதை தடுத்து விரட்டியடித்துள்ளனர்.
ஏற்கனவே பல படகுகள் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு உள்ளதால் சிறைப்பிடிப்புக்கு பயந்து அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றனர். இரவு முழுவதும் கடலில் மீன்பிடித்து நேற்று காலை கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில் எதிர்பார்த்ததைவிட குறைவான மீன்களே கிடைத்தன. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘பெரிய அளவில் மீன்பாடு இருக்கும், தீபாவளி செலவுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்து சென்றோம். ஆனால் எங்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க முடியாதபடி விரட்டியடித்தனர்.
இதனால் அதிகமான மீனவர்களுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டது’’ என்றனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மட்டுமின்றி, கடற்கொள்ளையர்களும் கடந்த சில மாதங்களாக தாக்குதல் நடத்தி வருவதால் கடலுக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். இந்திய – இலங்கை அரசுகள் இதுதொடர்பாக உரிய பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்
இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகத்திற்கு படகில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 3ம் தேதி இரவு, இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தலைமன்னார் அருகில் ஓலைத்தொடுவாய் கடலோர பகுதியில் ரோந்து சென்ற கடற்படையினர், சந்தேகத்திற்குரிய வகையில் கடலில் நின்ற படகில் சோதனை செய்தனர்.
இதில், படகின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ தங்கக்கட்டிகளை கைப்பற்றினர். படகுடன் தங்கத்தை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், தலைமன்னார் மற்றும் வங்காளை பகுதியை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.