சென்னை: கடந்த ஜூலை 25ம் தேதி 9 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் அனுப்பினார். கடந்த வாரம் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 தமிழக மீனவர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்து, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இதையடுத்து 9 தமிழக மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பாஸ்போர்ட், விசா இல்லாததால் அவர்களுக்கு எமர்ஜென்சி சர்ட்டிபிகேட்டை இந்திய தூதரகம் வழங்கியது. பின்னர் 9 மீனவர்களும் சென்னை திரும்ப விமான டிக்கெட்டுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று அதிகாலை இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து ஏர்இந்தியா விமானத்தில் 9 தமிழக மீனவர்களும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதிக்கு 9 மீனவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.