*125 பக்தர்கள் கைது
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் பக்தர்களை வழக்கமான வழியில் தரிசனத்திற்கு அனுமதிக்க வலியுறுத்தி, ஆலய பிரவேச போராட்டம் நடைபெற்றது. இதில் 125 பக்தர்களை ேபாலீசார் கைது செய்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்கள் கட்டண வரிசையில் சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும் என புதிய நடைமுறையை கோயில் நிர்வாகம் அமல்படுத்தியது.
இதனால் மூலவரை தரிசிக்க வரும் உள்ளூர் பக்தர்களை வழக்கமாக செல்லும் சண்டிகேஸ்வரர் அருகே உள்ள வடக்கு கேட் வழியாக செல்ல அனுமதிக்காமல், வெளியூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் கட்டண வரிசையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை உடனே சரி செய்ய வேண்டுமென உள்ளூர் பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள் கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். மேலும் கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த இரு பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தது. இதையடுத்து பழைய முறைப்படி தரிசனத்துக்கு அனுமதிக்க வலியுறுத்தி, ஜூன் 17ல் ஆலய பிரவேச போராட்டம் நடத்துவது என உள்ளூர் பக்தர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை ராமநாதசுவாமி கோயில் மேற்கு கோபுரம் நுழைவாயில் முன்பு நூற்றுக்கணக்கான உள்ளூர் பக்தர்கள் ஆலய பிரவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உள்ளூர் பக்தர்கள், ஆன்மீகப் பெருமக்கள், பூசாரிகள், புரோகிதர்கள், வியாபாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு வழக்கமான வழியில் உள்ளூர் பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போலீசார் மேற்கு கோபுர நுழைவாயில் முன்பு இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் பக்தர்களை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடுப்புகளை தாண்டி ஆலய பிரவேசம் செய்ய முயன்ற 125 உள்ளூர் பக்தர்களை கைது செய்தனர். ஆலய பிரவேச போராட்டத்தால் கோயில் மேற்கு நுழைவாயில் முன்பு கடும் பரபரப்பு நிலவியது. போராட்டத்தால் மேற்கு ரதவீதி சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.